விஞ்ஞான துளிகள்


விஞ்ஞான துளிகள்
x
தினத்தந்தி 3 Aug 2017 11:00 PM IST (Updated: 3 Aug 2017 3:14 PM IST)
t-max-icont-min-icon

நிலவில் நீர்வளம் : நிலவின் நிலத்தடியில் மிகப்பெரிய அளவில் தண்ணீர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 எரிமலை படுகைகள் நிறைந்த பகுதியில், நிலத்தின் அடியில் இந்த தண்ணீர் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் நிலவு குடியிருப்புகளை ஏற்படுத்தும்போது இந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகள் மத்தியில் மகிழ்ச்சியை உருவாக்கி உள்ளது. அப்பல்லோ 15, மற்றும் அப்பல்லோ 17 விண்கலங்களின் நிலவுப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட செயற்கை கோள் படங்கள் இதை உறுதிப்படுத்தி உள்ளது. எவ்வளவு நீர் இருக்கிறது என்று மதிப்பிடும் பணிகள் நடக்கின்றன.

செயற்கை கண் தயார் : வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, எலிகளுக்கான விழிப்படலத்தை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். ஷெப்ராபிஷ் எனப்படும் மீன் இனத்தில் பழுதடைந்த உடல்செல்கள் மற்றும் பார்வை செல்கள் இயற்கையாக புதுப்பிக்கப்படும் ஆற்றல் இருப்பது அறியப்பட்டுள்ளது. முல்லர் கிளியா எனப்படும் மரபணுக்கள், பாதிக்கப்பட்ட செல்களை அறிவதும், அவற்றை மறுஉற்பத்தி செய்வதும் கண்டறியப்பட்டது. இப்படி மறுஉற்பத்தியாகும் செல்கள் ஆசில்-1 எனப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு எலிகளில் காணப்படும் முல்லர் கிளியா மரபணுக்களைத் தூண்டி எலிகளின் விழித்திரையை வெற்றிகரமாக உருவாக்கி இருக்கிறது விஞ்ஞானிகள் குழு. இந்த வெற்றி மனிதர்களின் கண் பாதிப்புகளுக்கும் பிரகாசமான விடியலைத் தேடித்தரும் என்று நம்பப்படுகிறது.

எலக்ட்ரானிக் சாலை :
ஆஸ்திரேலியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் ஏற்றிக்கொள்ள வசதியாக எலக்ட்ரானிக் சாலை அமைக்கப்பட உள்ளது. மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியாக விளங்கும் ‘கிரேட் பேரியர் ரீப்’ பவளப்பாறை பகுதியில், கடற்கரை சாலையை எலக்ட்ரானிக் சாலையாக உருவாக்க குயின்ஸ்லாந்து மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மிகவும் பிரமாண்டமான இந்த சாலை 1800 கி.மீ. நீளத்திற்கு உருவாக்கப்படுகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்தி இவ்வளவு தூரத்தை கடக்க முடிவது, பொதுமக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சில ஆயிரங்களாக இருக்கும் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை, 2030-க்குள் 10 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களாக உயர்த்தும் நோக்கத்துடன் இந்த சாலை உருவாக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக இந்த பவளப்பாறை அடுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதை அழிவிலிருந்து தடுக்கும் முயற்சியாகவும் இந்த சாலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளையும் இந்த சாலை பெரிதும் கவரும் என்றும் எதிர்பார்க்ப்படுகிறது.

செவ்வாய் கிராமம் : சீனா, செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு போன்ற கிராமத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது. வடமேற்கு சீன பகுதியில் திபெத் அருகே இந்த செவ்வாய் கிராமத்தை உருவாக்குகிறது. 2020-க்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்பி உலக நாடுகளின் பார்வையை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியாக இந்த களத்தில் இறங்கி உள்ளது சீனா. ஏற்கனவே அமெரிக்காவும், ரஷியாவும் செவ்வாய் பயணத்திற்கான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவும் மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியிருப்பதுடன், மனித பயணம் பற்றிய ஆராய்ச்சித் திட்டத்துடன் தயார் நிலையில் இருக்கிறது.

செவ்வாய் கிராமத்தை உருவாக்குவதற்காக ஹாய்ஷி பெர்பெக்சர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது சீனா. செவ்வாய் கிராமம் அமைய உள்ள மலைப்பகுதி, நீண்ட காலமாக காற்று அரிப்பின் காரணமாக புழுதி-பாறை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதை எளிதாக செவ்வாய் தோற்றத்திற்கு மாற்ற முடியும் என்று இந்தப் பகுதியை தேர்வு செய்துள்ளனர். யார் முதலில் செவ்வாயில் காலடி வைக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story