டெல் தொழிலாளர்கள் கஞ்சிதொட்டி திறந்து போராட்டம்


டெல் தொழிலாளர்கள் கஞ்சிதொட்டி திறந்து போராட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2017 3:00 AM IST (Updated: 3 Aug 2017 8:01 PM IST)
t-max-icont-min-icon

7 மாத சம்பள நிலுவைத்தொகையை உடனே வழங்கக்கோரி நேற்று டெல் தொழிலாளர்கள் கஞ்சிதொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்பாடி,

காட்பாடியை அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் டெல் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. சம்பளத்தை வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து சட்டசபையில் துரைமுருகன் எம்.எல்.ஏ. பேசினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பெல் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனாலும் இதுவரை அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் சம்பள நிலுவைத்தொகை வழங்கக்கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் டெல் தொழிற்சாலை அமைந்துள்ள மலையடிவாரத்தில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நேற்று நடந்தது. கூட்டமைப்பு செயலாளர் மல்லிகேசன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் மிகவும் சிரமப்படுவதாகவும், அதனால் அரசு தனிக்கவனம் செலுத்தி உடனடியாக சம்பள நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள் பணியை புறக்கணித்துவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காட்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story