செங்கத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலி


செங்கத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலி
x
தினத்தந்தி 4 Aug 2017 3:45 AM IST (Updated: 3 Aug 2017 8:29 PM IST)
t-max-icont-min-icon

செங்கத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5–ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள்.

செங்கம்,

செங்கத்தை அடுத்த கரியமங்கலம், அண்டப்பேட்டை, கொட்டகுளம், சொர்பனந்தல் மற்றும் நீப்பத்துரை உள்ளிட்ட பகுதிகளில் 100–க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். செங்கம் நீர்ப்பத்துரை அம்பேத்கர் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி தனஞ்செழியன். இவருடைய மகள் சுஜாதா (வயது 10). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுஜாதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதனையடுத்து அவள் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறினர்.

அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுஜாதா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தாள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நீப்பத்துரை கிராமத்தில் சுகாதார துறையினர் ஆய்வு நடத்தினர். மாணவி இறந்த சம்பவத்தால் அந்த பகுதியில் டெங்கு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

டெங்கு பரவாமல் தடுக்க காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒட்டு மொத்த துப்புரவு பணி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story