மத்திய அரசுக்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் கடிதம் மத்திய போலீஸ் படையை பயன்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு
மந்திரி டி.கே.சிவக்குமார் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக மத்திய அரசுக்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு,
மந்திரி டி.கே.சிவக்குமார் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக மத்திய அரசுக்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் மத்திய போலீஸ் படையை பயன்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய போலீஸ் படைகர்நாடகத்தில் மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. இதற்கு பாதுகாப்புக்காக மத்திய போலீஸ் படையை(சி.ஆர்.பி.எப்.) வருமான வரித்துறை பயன்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியாவுக்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் சுபாஷ்சந்திர குந்தியா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–
வருமான வரித்துறை நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளது. ராமநகர் மாவட்டத்தில் ஈகிள்டன் என்ற தனியார் சொகுசு விடுதியிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது பாதுகாப்பு பணிக்காக மத்திய போலீஸ் படையினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். சட்டம்–ஒழுங்கை பராமரிப்பது கர்நாடக அரசின் போலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்டது.
சட்டம்–ஒழுங்கை காப்பாற்ற...இந்த சோதனை நடத்துவதற்கு முன்பாக வருமான வரித்துறையினர் உள்ளூர் போலீசாரிடம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. 30 மத்திய போலீஸ் படையினர் ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக எனக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மந்திரியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அப்போது சட்டம்–ஒழுங்கை காப்பாற்ற போலீசார் தேவைப்பட்டனர். உடனே போலீசார் அங்கு அனுப்பப்பட்டனர். அங்கு சட்டம்–ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் நிலை இருந்ததாக பெங்களூரு நகர மத்திய கோட்ட துணை போலீஸ் கமிஷனர் எனக்கு தகவல் அனுப்பியுள்ளார். பெங்களூரு புறநகர் மற்றும் ராமநகர் ஆகிய மாவட்டங்களிலும் இதேபோன்ற நிலை இருந்ததாக அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் எனக்கு தகவல் தெரிவித்தனர்.
பிரச்சினைகளை எழுப்பியுள்ளதுகர்நாடகத்தில் கடந்த காலங்களில் பாதுகாப்பு உடனோ அல்லது பாதுகாப்பு இல்லாமலோ வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் எப்போதும் மத்திய போலீஸ் படை பாதுகாப்புடன் வருமான வரி சோதனை நடந்தது இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது என்பது அவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால் உள்ளூர் போலீசுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மத்திய போலீஸ் படையை பயன்படுத்தி இருப்பது சில முக்கியமான பிரச்சினைகளை எழுப்பியுள்ளது.
இது கர்நாடக போலீசின் நம்பகத்தன்மை, தொழிலின் ஒருமைப்பாடு, நேர்மைக்கு எதிர்மறையான விஷயத்தை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் நடந்த வருமான வரி சோதனையின்போது கர்நாடக போலீசார் மேற்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்த குறைபாடும் இருந்ததாக புகார் பதிவாகவில்லை. வருமான வரித்துறையும் இதுவரை அவ்வாறு எந்த புகாரையும் கூறவில்லை.
மாநில அதிகாரத்திற்கு உட்பட்டதுஆயுதங்களுடன் மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது மக்களுக்கு தவறான தகவலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சட்டம்–ஒழுங்கை பாதுகாப்பது என்பது மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது. இதுபோன்ற மத்திய போலீஸ் பாதுகாப்பு படையை பயன்படுத்துவதற்கு முன்பு உள்ளூர் போலீசாருடன் கலந்து ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். இது தான் உண்மையான விதிமுறை ஆகும். இதுபோன்று ஒத்துழைப்புடன் செயல்படுவதன் மூலம் தேவை இல்லாத சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்படும்.
எனவே, வருமான வரி சோதனைக்கு மத்திய போலீஸ் படையை பயன்படுத்தியதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்புகிறது. இதுபோன்ற விஷயங்களில் மத்திய–மாநில அரசு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதை எந்த வகையிலும் மீறக்கூடாது. ஏனென்றால் இரண்டு அரசுகளுமே பொறுப்பை பகிர்ந்து கொள்கிறது. அதனால் வருமானத்துறைக்கு தகுந்த அறிவுரையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.