வழிகாட்டி பெயர் பலகை தூணில் மாநகர பஸ் மோதி விபத்து 5 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம்


வழிகாட்டி பெயர் பலகை தூணில் மாநகர பஸ் மோதி விபத்து 5 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Aug 2017 6:30 AM IST (Updated: 4 Aug 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணாசாலையில் உள்ள வழிகாட்டி பெயர் பலகை தூண் மீது மாநகர பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் மாநகர பஸ்சில் பயணம் செய்த 5 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை,

சென்னை சென்டிரலில் இருந்து சைதாப்பேட்டை வரை மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் அண்ணாசாலையில் பல பகுதிகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன.

அண்ணாசாலை இரு வழி சாலையாக இருக்கும் போது, அண்ணாசாலை போக்குவரத்து போலீஸ் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஒரு வழிகாட்டி பெயர் பலகையை அமைத்தனர். ஆனால் ஒரு வழி சாலையாக மாற்றப்பட்ட பிறகு அந்த வழிகாட்டி பெயர் பலகையை அகற்றாமல் விட்டுவிட்டனர்.

படுகாயம்

நேற்று சைதாப்பேட்டையில் இருந்து பிராட்வே நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த மாநகர பஸ்(வழித்தடம் எண்:18 கே) சாலையில் இருந்த அந்த வழிகாட்டி பெயர் பலகை தூண் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் அந்த பெயர் பலகை கீழே விழுந்தது.

அந்த மாநகர பஸ்சில் பயணம் செய்த பிரேமா(வயது27), தேவசிகாமணி(62), கிருஷ்ணம்மாள்(43), தீபா(32), கீதா(25) என்ற 5 பெண்களும், ஆல்பர்ட்ஜேம்ஸ்(44), குமார்(62), சேகர்(62) சீனிவாசன்(44) என்ற 4 ஆண்களும் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தனர். பஸ்சின் டிரைவரான செஞ்சியை சேர்ந்த ஏழுமலை(32) என்பவரும், பஸ்சின் கண்டக்டரான விழுப்புரத்தை சேர்ந்த இளங்கோ(27) என்பவரும் படுகாயம் அடைந்தனர்.

மேலும் பலர் சிறுகாயங்களுடன் தப்பினர். இந்த சம்பவத்தை பார்த்த அண்ணாசாலை போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

விபத்துக்குள்ளான மாநகர பஸ்சை கிரேன் மூலம் அகற்றினர். இந்த விபத்தால் அண்ணாசாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காலையில் அலுவலகத்திற்கு சென்றவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாநகர பஸ் டிரைவர் ஏழுமலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story