குன்னூர் அருகே வாழை மரங்களை நாசப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்


குன்னூர் அருகே வாழை மரங்களை நாசப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 4 Aug 2017 4:15 AM IST (Updated: 4 Aug 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே வாழை மரங்களை நாசப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

குன்னூர்,

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான காடு மற்றும் தனியார் தேயிலை, காபி எஸ்டேட்டுகள் உள்ளன. தனியார் தோட்டங்களில் ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பலாப்பழ சீசன் இருக்கும். இந்த சீசனில் காட்டு யானைகள் பலாப்பழத்தை ருசிக்க சமவெளி பகுதியில் இருந்து வருவது வழக்கம்.

இந்த ஆண்டு பலாப்பழ சீசனையொட்டி சமவெளி பகுதியில் இருந்து 8 காட்டு யானைகள் வந்தன. இவைகள் தனித்தனி குழுவாக பிரிந்து உணவு தேட ஆரம்பித்தன. இதில் 3 யானைகள் மட்டும் தற்போது குன்னூர் பகுதியில் சுற்றித் திரிந்து வருகின்றன. இவைகள் சில நாட்களுக்கு முன்பு தனியார் தங்கும் விடுதிக்கு வந்து அங்கிருந்த நுழைவு வாயில் கேட்டை உடைத்து சேதப்படுத்தின. இதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று காட்டு யானைகளை விரட்டினார்கள்.

இந்த நிலையில் குன்னூர் அருகே வண்டிச்சோலை ஊராட்சிக்குட்பட்ட நஞ்சப்பசத்திரம் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு 3 காட்டு யானைகள் புகுந்தன. அங்குள்ள வாழை மரங்கள் மற்றும் விவசாய பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

இது குறித்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் குன்னூர் வனச்சரகர் பெரியசாமி தலைமையில் வனவர் சவுந்திரராஜன், ஊழியர்கள் விக்ரம், பாபு, மணிகண்டன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்களும் அங்கு சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து அவைகளை ஆதிவாசிகள் உதவியுடன் அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story