டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு


டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 4 Aug 2017 4:00 AM IST (Updated: 4 Aug 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

ஊட்டி,

ஊட்டி நகராட்சி கமிஷனர் ரவி (பொறுப்பு) உத்தரவின்படி, டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் ஊட்டியில் உள்ள பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஊட்டி-குன்னூர் சாலை, காந்தல், படகு இல்லம், கமர்சியல் சாலையில் உள்ள காபிஹவுஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கரகாட்ட கலைஞர்கள் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் திறந்தவெளியில் அசுத்தம் செய்வதை தவிர்த்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து கரகாட்டம், தப்பாட்டம், கட்டக்கால் ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பொதுமக்கள் பார்க்கும் வகையில் நடத்தப்பட்டது. இதில் கலைஞர்கள் கரகாட்டம் ஆடியும், பாட்டு பாடியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஆட்டுக்கல், சிமெண்டு தொட்டிகள், மண் தொட்டிகள், பிளாஸ்டிக் கேன்கள், பானைகள், நீர்தேக்க தொட்டிகள் ஆகியவைகளை கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். வீட்டின் வெளிப்புறத்தில் கிடக்கும் டயர், உடைந்த பானைகள், தேங்காய் சிரட்டைகள், கண்ணாடி பாட்டில்கள், பூந்தொட்டிகள், டீ கப்புகள் போன்றவைகளில் மழை நீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே, அவைகளை அப்புறப்படுத்துவதோடு, பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கொசுக்களால் மலேரியா, டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. எனவே, கொசுக்கள் உற்பத்தியாகாமல் கட்டுப்படுத்துவது நமது கையில் தான் இருக்கிறது. மேற்கண்டவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் கொசுக்கள் இல்லாத இல்லத்தை உருவாக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதேபோல் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள், பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் கூறும் போது, ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து கரகாட்ட கலைஞர்கள் மூலம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதேபோல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன்பெறுவார்கள். குறிப்பாக கோடப்பமந்து கால்வாயில் கழிவுநீரை கலக்கக்கூடாது என்றார். 

Related Tags :
Next Story