திருப்பூர், அவினாசியில் ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை


திருப்பூர், அவினாசியில் ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 4 Aug 2017 4:00 AM IST (Updated: 4 Aug 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பெருக்கையொட்டி திருப்பூர் மற்றும் அவினாசியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர்,

கொங்கு மண்டலத்தில் ஆடிப்பெருக்கு விழா மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் பொதுமக்கள் காலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் பகுதியை பொறுத்தவரை நேற்று காலையிலேயே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

மேலும் திருப்பூரில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருப்பூர் விஸ்வேஸ்வரசாமி கோவிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் காலை 6 மணிக்கு விஸ்வேஸ்வரசாமி, விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.யுனிவர்சல் ரோட்டில் உள்ள சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. வீரராகவ பெருமாள் கோவிலில் காலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருப்பூர் டவுன்ஹாலில் உள்ள செல்வ விநாயகர் சிறப்பு மலர் அலங்காரத் தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காலையிலேயே வந்து சாமிதரிசனம் செய்தனர். ஆடிப்பெருக்கையொட்டி பெரும்பாலான பனியன் நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

அவினாசியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது. ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணி முதல் அவினாசி லிங்கேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதையடுத்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதுபோல் இந்த கோவிலின் உப கோவில்களான கரிவரதராஜ பெருமாள் கோவில், வீரஆஞ்சநேயர் கோவில், சேவூர் வாலீசுவரர் கோவில், கருவலூர் மாரியம்மன் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், தாளக்கரை லட்சுமிநரசிம்ம பெருமாள் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், குட்டகம் முக்கண்ணீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இங்கு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். 

Next Story