தனுஷ்கோடி பகுதிக்கு 53 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் வினியோகம் தொடங்கியது


தனுஷ்கோடி பகுதிக்கு 53 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் வினியோகம் தொடங்கியது
x
தினத்தந்தி 4 Aug 2017 4:15 AM IST (Updated: 4 Aug 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடி பகுதி மீனவ மக்களுக்கு ராமேசுவரம் நகராட்சி மூலம் குடி தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் மாவட்டத்தின் தீவுப்பகுதியான தனுஷ்கோடி, 1964-ம் ஆண்டு வீசிய புயலால் அழிந்து போனதால், பொதுமக்கள் வாழ்வதற்கு அரசால் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. எனினும், தனுஷ்கோடி, கம்பிப்பாடு, முகுந்தராயர்சத்திரம் ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் 53 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களுக்கு குடிதண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. மேலும் தங்கள் குடி தண்ணீர் தேவைக்கு கடற்கரை ஓரத்திலேயே ஊற்றை தோண்டி அதில் இருந்து கிடைக்கும் தண்ணீரை சேகரித்தனர். மேலும் ஒரு சில மீனவ குடும்பங்கள் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்து செல்லும் தனியார் குடிநீர் வாகனங்களிடமிருந்து ஒரு குடம் தண்ணீருக்கு ரூ.10 கொடுத்து வாங்கி பருகி வருகின்றனர்.

இந்நிலையில், தனுஷ்கோடி புனரமைப்பு திட்டத்தின் கீழ், ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலும் புதிதாக சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே, ராமேசுவரம் கோவிலுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் அரிச்சல்முனை கடற்கரை வரையிலும் தினமும் வந்து செல்கின்றன.

இந்த நிலையில் மீனவ மக்களின் குடிதண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ராமேசுவரம் நகராட்சி சார்பில் லாரி மூலம் தனுஷ் கோடிக்கு நேற்று குடி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் தொடங்கியது.

ராமேசுவரம் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் லாரி கம்பிப்பாடு கடற்கரை பகுதிக்கு வந்ததும், ஏராளமான பெண்கள் குடத்துடன் தண்ணீரை பிடிக்க குவிந்திருந்தனர்.

தொடர்ந்து நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) தனலட்சுமி குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். நகராட்சி சுகாதாரஆய்வாளர் அய்யப்பன் உடனிருந்தார். அதன் பின்பு பாலம், முகுந்தராயர்சத்திரம் கடற்கரை பகுதி மீனவர்களுக்கும் நகராட்சி லாரி மூலம் குடி தண்ணீர் வழங்கப்பட்டது.

இது பற்றி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தனலட்சுமி கூறியதாவது:-

கம்பிப்பாடு, எம்.ஆர்.சத்திரம், பாலம் ஆகிய 3 இடங்களில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் 3 குடிதண்ணீர் தொட்டிகள் வைக்கப் படவுள்ளன. வாரத்தில் 3 நாட்கள் நகராட்சி வாகனம் மூலம் நிரந்தரமாக வைக்கப்படவுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படும். மீனவர்கள் தேவையான அளவுக்கு தண்ணீரை பிடித்துக் கொள்ளலாம். அனைவரும் குடி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதிக்கு 53 ஆண்டுகளுக்கு பிறகு சாலை வசதி கிடைத்து அடுத்த ஒருவாரத்திலேயே குடி தண்ணீரும் நேரடியாக வழங்கப்பட்டு வருவது அப்பகுதி மீனவ மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Tags :
Next Story