பூட்டி கிடக்கும் வீடுகளில் கொள்ளையடித்து வந்த காவலாளி உள்பட 2 பேர் கைது
மும்பையில் பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த காவலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பையில் பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த காவலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வங்கி ஊழியர்மும்பை முல்லுண்டு 90 அடி சாலையை சேர்ந்தவர் நந்தகுமார். வங்கி ஊழியர். இவரது மனைவி நர்மதா. இவர் எம்.டி.என்.எல். நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் கணவன், மனைவி இருவரும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை போயிருந்தது.
இதைப்பார்த்து பதறிப்போன அவர்கள் இது குறித்து நவ்கர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் வசித்து வரும் கட்டிடத்தின் காவலாளி சந்தோஷ்குமார் திடீரென தலைமறைவானது தெரியவந்தது.
2 பேர் கைதுஇதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில், அவர் சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று உள்ளூர் போலீசார் உதவியுடன் அவரை அதிரடியாக கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், அவரது உண்மையான பெயர் கவுரி சங்கர் என்பது தெரியவந்தது. தனது கூட்டாளி ராஜாசிங் என்பவருடன் சேர்ந்து வில்லேபார்லே, காந்திவிலி, உள்பட பல இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகளை குறி வைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ராஜாசிங்கையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணத்தையும் பறிமுதல் செய்தனர். இருவரும் விசாரணைக்காக மும்பை அழைத்து வரப்படுகின்றனர்.