வரதட்சணை கொடுமையால் பரிதாபம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சிக்கமகளூரு,
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைதொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமனார் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
வரதட்சணை கொடுமைசிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா கெஞ்சாப்புராவை சேர்ந்தவர் ருத்ரா நாயக். இவரது மகள் லீலாபாய் (வயது 26). அதே கிராமத்தை சேர்ந்த ஆச்சார்யா நாயக்கின் மகன் மஞ்சாநாயக் (30). இவருக்கும் லீலாபாய்க்கும் கடந்த 2014–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது லீலாபாயின் பெற்றோர் மஞ்சாநாயக்கிற்கு ரூ.25 ஆயிரமும், தங்க நகைகளும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக கூடுதல் வரதட்சணை கேட்டு மஞ்சா நாயக், அவரது தந்தை ஆச்சார்யா நாயக், தாய் ஜங்கிபாய் ஆகியோர் லீலாபாயை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இருப்பினும் அவர் கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும், வரதட்சணை வாங்கி வரும்படி கூறி லீலாபாயை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.
பெண் தற்கொலைஇதன் காரணமாக லீலாபாய் மனம் உடைந்த நிலையில் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து லீலாபாயின் தந்தை ருத்ரா நாயக், கலசா போலீசில் ஒரு புகார் செய்துள்ளார்.
அதில், தனது மகளை அவரது கணவர் மஞ்சா நாயக், மாமனார் ஆச்சார்யா நாயக், மாமியார் ஜங்கிபாய் ஆகிய 3 பேரும் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் மனம் உடைந்த மகள் லீலாபாய் தற்கொலை செய்துகொண்டார். எனவே தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார், லீலாபாயின் கணவர், மாமனார், மாமியார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.