தமிழக முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கூடுதலாக 524 வகை சிகிச்சை சேர்ப்பு


தமிழக முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கூடுதலாக 524 வகை சிகிச்சை சேர்ப்பு
x
தினத்தந்தி 4 Aug 2017 4:00 PM IST (Updated: 4 Aug 2017 3:31 PM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கூடுதலாக 524 வகை சிகிச்சை சேர்க்கப்பட்டு உள்ளதாக திட்ட இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

கோவை

தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் புதிய அம்சங்களை புகுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதற்கு கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, யுனைடெட் இன்சூரன்ஸ் தலைமை நிர்வாகி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக இருப்ப வர்கள் கட்டணம் இல்லாமல் எந்த மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். 1,027 வகையான மருத்துவ சிகிச்சைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறலாம். மருத்துவ சிகிச்சை அல்லாமல் சோதனை முறை மற்றும் தொடர் சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கூடுதலாக 524 வகை சிகிச்சை சேர்க்கப்பட்டு உள்ளது. அதன்படி இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை, செவித்திறன் கருவி பொருத்துதல் உள்பட 8 வகையான உயர் சிகிச்சைகளும் அடங்கும். அத்துடன் சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்பட அனைத்து வகையான ஸ்கேன்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம் 5 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக 6-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அந்த வகையில் இதுவரை 1 கோடியே 58 குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அதில் 20 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அதன் மதிப்பு ரூ.4 ஆயிரத்து 160 கோடி ஆகும்.

இந்த திட்டத்தின் செயல்பாடு மற்றும் தரத்தை உயர்த்த புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. சில மருத்துவமனைக்கு சென்றால் அங்கு காப்பீட்டு திட்டம் இருந்தும், சில சிகிச்சைகள் அளிக்கப் படுவது இல்லை என்ற புகார் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

இதுபோன்ற பிரச்சினை ஏற்படும்போது புகார் செய்ய கட்டணமில்லாத தொலைபேசி எண் வசதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பாதிக்கப்படுபவர்கள் 18004253993 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். அவ்வாறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுபவர்கள் வீட்டிற்கு சென்ற பின்னரும் அவர்களின் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மொத்தத்தில் அனைத்து ஏழை-எளிய மக்களும் இலவசமாக சிகிச்சை பெற இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story