கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தண்ணீர் இன்றி கருகும் தென்னை மரங்கள்


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தண்ணீர் இன்றி கருகும் தென்னை மரங்கள்
x
தினத்தந்தி 4 Aug 2017 5:01 PM IST (Updated: 4 Aug 2017 5:01 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தண்ணீர் இன்றி தென்னை மரங்கள் கருகி வருகின்றன.

உத்தமபாளையம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போய் விட்டது. இதன் காரணமாக நெல், வாழை, திராட்சை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையில் இருந்து குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பருவமழை பொய்த்துப்போனதால் நீர்நிலைகள் வறண்டுபோய் விட்டன. நிலத்தடி நீர்மட்டம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக கம்பம், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், அனுமந்தன்பட்டி பகுதியில் தென்னை மரங்கள் தண்ணீர் இன்றி கருகி கொண்டிருக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே கருகி போன தென்னை மரங்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மழை பெய்யவில்லை. தொடர்ந்து வறட்சி நிலவி வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்துப்போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

கிணற்று பாசனத்தை நம்பி இருந்த தென்னை மரங்களும் தண்ணீர் இன்றி காய்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை நம்பி இருந்த தொழிலாளர்கள், பிழைப்பு தேடி திருப்பூர் மற்றும் கேரள மாநிலத்துக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தமிழக அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story