சென்னை செல்ல பஸ்களுக்கு அனுமதி தராததை கண்டித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தர்ணா


சென்னை செல்ல பஸ்களுக்கு அனுமதி தராததை கண்டித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 5 Aug 2017 4:00 AM IST (Updated: 4 Aug 2017 11:28 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் கோரிக்கைகைளை வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

சிவகங்கை,

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பஸ் மற்றும் வேன்களில் சென்னைக்கு செல்ல உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் இருந்தும் சென்னை செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

இதையொட்டி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று மாலை சென்னை செல்ல தயாராக இருந்தனர். இந்நிலையில் சிவகங்கையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சென்னை செல்லும் பஸ்களுக்கு அனுமதி தர மறுத்து விட்டார்களாம். இதை அறிந்த ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு இருந்தவர்களிடம் வட்டார போக்குவரத்து அதிகாரி பற்றி கேட்டபோது அவர்கள் வட்டார போக்குவரத்து அதிகாரி சாலை பாதுகாப்பு கூட்டத்திற்கு சென்று விட்டதாகவும் அவர் வந்தால் தான் அது பற்றி முடிவு செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் வட்டார போக்குவரத்து அதிகாரி வராததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சிவகங்கை தாசில்தார் நாகநாதன், நகர் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன்பின் வட்டார போக்குவரத்து அதிகாரி திருவள்ளுவன் அங்கு வந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை செல்ல போக்குவரத்து அனுமதி வழங்குவதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

Next Story