குஜிலியம்பாறை அருகே பலத்த மழையால் சேதமடைந்த தரைப்பாலங்கள் சீரமைக்கப்படுமா?


குஜிலியம்பாறை அருகே பலத்த மழையால் சேதமடைந்த தரைப்பாலங்கள் சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 5 Aug 2017 4:00 AM IST (Updated: 5 Aug 2017 12:59 AM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறை அருகே பலத்த மழையால் சேதமடைந்த தரைப்பாலங்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை அருகே திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலையில் இருந்து தோப்பகவுண்டனூர் செல்ல சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே வறட்டாற்று ஓடை அமைந்துள்ளது. மழைக்காலங்களில் பண்ணப்பட்டி, தளிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் இந்த ஓடை வழியாக சென்று சி.அம்மாபட்டியில் உள்ள சின்னகுளத்தை அடைகிறது.

இந்த வறட்டாற்று ஓடையின் குறுக்கே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கற்கள் மூலம் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பாலத்தின் அடியில் தண்ணீர் செல்லும் வழித்தடத்தில் கற்கள் பெயர்ந்து விழுந்தன. மேலும் பாலமும் அதன் உறுதித்தன்மையை இழந்து காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையால் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சாலையும் துண்டிக்கப்பட்டது. இதன்காரணமாக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முத்தம்பட்டி மற்றும் தாதனூர் வழியாக குஜிலியம்பாறைக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. பாலம் சேதமடைந்தது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர்.

ஆனால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்களே பாலத்தின் மேல் பகுதியில் மணலை கொட்டி இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்று வரும் வகையில் பாதை அமைத்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக பாலம் முழுமையாக இடிந்து விழுந்தது. இதனால் சாலையும் முழுமையாக துண்டிக்கப்பட்டது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்த பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் திண்டுக்கல்- கரூர் மாநில நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு வடுகம்பாடி கிராமத்துக்கு செல்ல இணைப்பு சாலை உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே உள்ள வறட்டாற்று ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலமும் பராமரிப்பு இல்லாததால் உறுதித்தன்மையை இழந்து சேதமடைந்தது. இதனால் அந்த பாலம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

அப்பகுதி மக்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று வரவும், பாதசாரிகளுக்காகவும் மட்டுமே அந்த தரைப்பாலம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் இந்த பாலமும் இடிந்தது. இதனை சீரமைக்க தற்போது வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்களே பொக்லைன் எந்திரம் மூலம் இடிந்த பாலத்தை அகற்றிவிட்டு அங்கு மணலை நிரப்பி தற்காலிகமாக பாதை அமைத்துள்ளனர்.

Next Story