தாறுமாறாக ஓடிய கார் சாலையில் உருண்டு பஸ் மீது மோதியது நகைக்கட அதிபர்களின் மகன்கள் 3 பேர் பலி


தாறுமாறாக ஓடிய கார் சாலையில் உருண்டு பஸ் மீது மோதியது நகைக்கட அதிபர்களின் மகன்கள் 3 பேர் பலி
x
தினத்தந்தி 5 Aug 2017 3:00 AM IST (Updated: 5 Aug 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

தாறுமாறாக ஓடிய கார் சாலையில் உருண்டு பஸ் மீது விபத்துக்குள்ளானதில் நகைக்கடை அதிபர்களின் மகன்கள் 3 பேர் பலியானார்கள்.

கோலார் தங்கவயல்,

பிறந்தநாளை கொண்டாட வெளியூருக்கு சென்றுவிட்டு வரும்போது தாறுமாறாக ஓடிய கார் சாலையில் உருண்டு பஸ் மீது விபத்துக்குள்ளானதில் நகைக்கடை அதிபர்களின் மகன்கள் 3 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

நகைக்கடை அதிபர்களின் மகன்கள்

கோலார் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வாஸ்(வயது 22). இவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஹரி(23), ரோகன்(22), சுபாஷ்(21), கார்த்திக்(20). இவர்கள் 5 பேரும் நகைக்கடை அதிபர்களின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விஷ்வாசுக்கும் பிறந்தநாள் ஆகும்.

அவர் தனது நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தார். அதற்காக விஷ்வாஸ் உள்பட 5 பேரும் நேற்று முன்தினம் கோலாரில் இருந்து ஒரு காரில் வெளியூருக்கு சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோலார் நோக்கி அவர்கள் காரில் புறப்பட்டனர். காரை ஸ்ரீஹரி ஓட்டினார்.

3 பேர் பலி

அவர்கள் பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மடேரஹள்ளி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஸ்ரீஹரியின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி உருண்டது. மேலும் உருண்டபடியே எதிரே வந்த கர்நாடக அரசு பஸ்(கே.எஸ்.ஆர்.டி.சி.) மீது மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

காரில் இருந்த விஷ்வாஸ் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஸ்ரீஹரி, ரோகன், சுபாஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

சோகம்

இந்த விபத்தைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக காயம் அடைந்திருந்த விஷ்வாஸ், கார்த்திக் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோலாரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து கோலார் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதில் கார்த்திக் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் விபத்தில் இறந்த ஸ்ரீஹரி உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கோலார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நகைக்கடை அதிபர்களின் மகன்கள் 3 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் கோலாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story