ஓ.பன்னீர்செல்வத்திற்கு மனசாட்சி இருந்தால் அறிவித்து இருப்பாரா? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி


ஓ.பன்னீர்செல்வத்திற்கு மனசாட்சி இருந்தால் அறிவித்து இருப்பாரா? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
x
தினத்தந்தி 5 Aug 2017 5:15 AM IST (Updated: 5 Aug 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர்செல்வத்திற்கு மனசாட்சி இருந்தால் அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்து இருப்பாரா என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருமங்கலம்,

திருமங்கலம் ஒன்றியம் எஸ்.புளியங்குளம் கிராமத்தில் உள்ள 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்குளம் கண்மாயை தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கம், ரத்ததான கழகம் இணைந்து தூர்வார முடிவு செய்தது. அதற்கான தொடக்க விழா மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்மாய் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கண்மாய்களை தூர்வாரும் பணி என்பது ஒரு சிறப்பான பணி. தமிழக முதல்-அமைச்சர் மாநிலத்தில் குடிமராமத்து பணியை செய்ய அதிகாரபூர்வமாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கவும் அனுமதி தரப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு யார் வேண்டுமானாலும் வந்து செல்லலாம். டி.டி.வி.தினகரன் வருவார் என்பதற்காக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடவில்லை. அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்கள் பலம் இருப்பதால் அதில் இருந்து யாரும் பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டோம். ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளார். அவர் எங்களது சகோதரர்.

தமிழகத்தில் நடப்பது அம்மாவின் ஆட்சி தான். அவரும் அம்மா ஆட்சியில் இருந்து எங்களுடன் சேர்ந்து பணியாற்றியவர் தான். அவருக்கு மனசாட்சி இருந்திருந்தால் இந்த போராட்டத்தை அறிவித்து இருப்பாரா? ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருப்பவர்கள் சிலர் கனவில் கூட அ.தி.மு.க. அணிகள் இணையாது என கூறி வருகின்றனர்.

நாங்கள் கனவு காண சொல்லவில்லை. அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எங்களது விருப்பமாகும். தொண்டர்களின் விருப்பமும் அது தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story