போலீஸ்-பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு சாலை மறியலில் ஈடுபட்ட 250 பேர் கைது


போலீஸ்-பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு சாலை மறியலில் ஈடுபட்ட 250 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2017 4:15 AM IST (Updated: 5 Aug 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் அருகே புதிதாக மீண்டும் திறக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட முயன்றதை தடுத்ததால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைதொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்காடு,

நாகை மாவட்டம், பூம்புகார் அருகே தருமகுளத்தில் மதுக்கடை இருந்தது. இந்த கடை நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்டது. பின்னர் கடந்த மாதம் தருமகுளம் அருகே அந்த மதுக்கடையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது கீழையூர் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட கிராம மக்கள் சீர்காழிக்கு சென்று போராட்டம் நடத்தினர். அப்போது சீர்காழி தாசில்தாராக இருந்த மலர்விழி, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் தருமகுளம் பகுதியில் மதுக்கடை திறக்கப்படாது என கடிதம் மூலம் உறுதி அளித்தார். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி போலீஸ் பாதுகாப்புடன் தருமகுளம் பகுதியில் மீண்டும் மதுக்கடை திறக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று கீழையூர் சமுதாயக்கூடத்தில் ஒன்றாக கூடினர். பின்னர் அங்கிருந்து கிராம தலைவர் சின்னக்குஞ்சு, சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சசிக்குமார் ஆகியோர் தலைமையில் பெண்கள், மாணவர்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று மதுக்கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது பொதுமக்கள், மேற்கண்ட இடத்தில் மீண்டும் திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதனை அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேலன், மணிமாறன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மதுக்கடையை முற்றுகையிட ஊர்வலமாக வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்கள், அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கிராம தலைவர் சின்னக்குஞ்சு, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சசிக்குமார் மற்றும் பெண்கள் உள்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் பூம்புகார்- மயிலாடுதுறை- சீர்காழி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story