தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்ததை கண்டித்து பணியாளர்கள் சாலை மறியல்


தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்ததை கண்டித்து பணியாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Aug 2017 4:15 AM IST (Updated: 5 Aug 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

எழுமூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்ததை கண்டித்து பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் எழுமூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் ஒரு நாளைக்கு ரூ.230-க்கு பதிலாக, அனைவருக்கும் ரூ.120 மட்டுமே சம்பளமாக வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி பணியாளர்கள் நேற்று எழுமூர் - பெரம்பலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், முரளிதரன் ஆகியோர் விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் தொடர்ந்து சாலை மறியலை கைவிட மறுத்து, வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும், கிராம ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரியும் கோஷம் எழுப்பினர். மேலும் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் கூறினர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பணியாளர் களிடம் மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடிநீர் தட்டுப் பாட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் எழுமூர்- பெரம்பலூர் சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Next Story