நடைபாதை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரி மீது சரமாரி தாக்குதல்
நடைபாதை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரி சரமாரியாக தாக்கப்பட்டார்.
மும்பை,
நடைபாதை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரி சரமாரியாக தாக்கப்பட்டார்.
நடைபாதை வியாபாரிகள்மும்பை அந்தேரி ‘கே’ வார்டு பகுதியில் நடைபாதை வியாபாரிகள் பெருகி வருவதாக மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.
இந்த சமயத்தில் அங்கு விற்பனைக்கு வைத்திருந்த உணவு பொருட்கள் மீது மாநகராட்சி அதிகாரி தேவேந்திர ஜெயின் பூச்சி கொல்லி மருந்தை தெளித்ததாக கூறப்படுகிறது.
அதிகாரி மீது தாக்குதல்இதைப்பார்த்து அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த நடைபாதை வியாபாரிகள் அதிகாரி தேவேந்திர ஜெயினை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிவந்து நடைபாதை வியாபாரிகளிடம் இருந்து அவரை மீட்டனர்.
இதையடுத்து போலீசார் மாநகராட்சி அதிகாரியை தாக்கிய நடைபாதை வியாபாரிகள் சிலரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரியை நடைபாதை வியாபாரிகள் தாக்கிய இந்த சம்பவம் அந்தேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.