துறைமுக மேம்பாடு தொடர்பாக ஆலோசனை நாராயணசாமி தலைமையில் நடந்தது
புதுவை துறைமுக மேம்பாடு தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி,
புதுவையில் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை துறைமுகத்துடன் புதுவை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி புதுவை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் வந்து செல்வதற்கு வசதியாக முகத்துவார பகுதி தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தன்னார்வ அமைப்புகள் தெரிவித்துள்ளன. மேலும் பசுமை தீர்ப்பாயம் மூலம் இந்த திட்டத்தை முடக்கவும் முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது.
தன்னார்வ அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாராயணசாமி ஆலோசனை
இந்தநிலையில் துறைமுக மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, அரசு செயலாளர் பார்த்திபன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் துவாரகநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தற்போது நடைபெற்றுள்ள மேம்பாட்டு பணிகள், திட்டத்தை முடக்கும் விதமாக பசுமை தீர்ப்பாயத்துக்கு சென்றால் அதை முறியடிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story