கன்னியாகுமரி முதல் அமிர்தசரஸ் வரை..! விவசாயிகளை காப்பாற்ற விழிப்புணர்வு பயணம்


கன்னியாகுமரி முதல் அமிர்தசரஸ் வரை..! விவசாயிகளை காப்பாற்ற விழிப்புணர்வு பயணம்
x
தினத்தந்தி 5 Aug 2017 1:00 PM IST (Updated: 5 Aug 2017 12:05 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த டேவிட் ஆத்வேயின் செயல்பாடுகளை பார்க்கும்போது இந்திய விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் நாம் என்ன செய்தோம்...? என்ற கேள்வி நமக்குள்ளே எழுகிறது.

ங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த டேவிட் ஆத்வேயின் செயல்பாடுகளை பார்க்கும்போது இந்திய விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் நாம் என்ன செய்தோம்...? என்ற கேள்வி நமக்குள்ளே எழுகிறது. விவசாயத்திற்கு ஆதரவாக நாம் பேஸ்புக், டிவிட்டரில் ‘மீம்ஸ்’ பகிர்ந்து கொண்டிருக்க... இங்கிலீஷ்காரரான டேவிட், நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார். இந்திய விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதும், இந்திய விவசாயத்தை மேம்படுத்துவதுமே இவரது லட்சியம்.

அதற்காக ‘வாக் ஆப் ஜாய் இந்தியா’ என்ற விழிப்புணர்வு பயணத்தை தொடங்கியிருப்பதுடன், கன்னியாகுமரி முதல் அமிர்தசரஸ் வரை நடந்தே செல்ல திட்டமிட்டிருக்கிறார். அதன்படி கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி கன்னியாகுமரி யில் தொடங்கிய இவரது பயணம் தற்போது கேரளாவை நெருங்கி இருக்கிறது. தோளில் துணிப்பை, கையில் டிராலி சூட்கேஸ் என... வேகம் குறையாமல் நடந்து கொண்டிருக்கும் டேவிட்டிடம் பேசினோம். உற்சாகம் குறையாமல் பேசினார்.

‘வாக் ஆப் ஜாய் இந்தியா’ பயணத்தின் குறிக்கோள்?

உலகில் உள்ள பெரும் விவசாய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மற்ற நாட்டு மக்கள் தொழிற்சாலைகளையும், கணினி கம்பெனிகளையும் நம்பிக்கொண்டிருக்க... இந்திய மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். இத்தனை பெருமைமிக்க இந்தியாவில் சமீபகாலங்களாக விவசாயம் சரிவர நடைபெறுவதில்லை. பயிர் கடன், தண்ணீர் பற்றாக்குறை, குறைந்த விளைச்சல், நஷ்டம்... என விவசாயிகளின் கழுத்தை ஏராளமான பிரச்சினைகள் நெரிக்கின்றன. அதனால் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு வேலைகளுக்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு சிலரே பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனால் இந்திய விவசாயமும், இந்திய விவசாயிகளும் வேகமாக அழிந்து வருகிறார்கள். அந்த நிலைமையை தடுக்கவே விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். இது நிச்சயம் வெற்றி பெறும்.

பயணத்தை எப்படி திட்டமிட்டிருக்கிறீர்கள்?

இந்தியாவில் பஞ்சாப் முதல் தமிழகம் வரையில் இருக்கும் அத்தனை மாநிலங்களிலும் விவசாயமே முக்கிய தொழிலாக இருக்கிறது. அதற்காகவே கன்னியாகுமரியில் இருந்து பஞ்சாப்பின் அமிர்தசரஸ் வரை விழிப்புணர்வு பயணத்தை வடிவமைத்திருக்கிறேன். இதற்கிடைப்பட்ட 6 ஆயிரம் கிலோமீட்டர்களை நடந்து கடப்பதன் மூலம் ஏராளமான விவசாயிகளை சந்திக்க முடியும். அவர்களோடு பேச முடியும். அவர் களது கஷ்டங்களை புரிந்து கொள்ள முடியும். அத்துடன் விவசாயம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும். இதற்காகவே 13 மாநிலங்களை, 12 மாதங்களில் நடைபயணமாக கடக்க இருக்கிறேன்.

விழிப்புணர்வுகளை ஏற்படுத்த பல வழிகள் இருக்கிறது. நடைபயணம் மேற்கொள்வதன் நோக்கம் என்ன?

பிரச்சினைக்கான தீர்வை, அந்த பிரச்சினைக்குரிய இடத்திலேயே தேடுகிறேன். தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் மாறுபட்ட தட்பவெட்ப நிலை நிலவுகிறது. தமிழ்நாட்டில் வறட்சியின் காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஆனால் கேரளாவில் சாகுபடி குறைவாக இருப்பதாக கூறுகிறார்கள். இருவருக்கு ஒரேவிதமான தீர்வை வழங்கமுடியாது என்பதால்... பிரச்சினையை புரிந்துக்கொள்வதற்கும், அதற்கான தீர்வை தேடுவதற்கும் அவகாசம் தேவைப்படுகிறது. அதற்காகவே நடைபயணத்தை தேர்ந்தெடுத்தேன்.

கன்னியாகுமரியில் இருந்து கேரளா வந்தடைய 15 நாட்கள் ஆனது. அதற்குள் தமிழ்நாட்டின் விவசாய முறைகளை புரிந்து கொள்ள முடிந்தது. வறட்சியால் விவசாயம் பாதிக்கப்படுவதை கண்கூடாக பார்க்க முடிந்தது. காலநிலை, மண்ணின் தன்மை, பயிர் செய்யும் முறைகளை குறிப்பு எடுத்து இங்கிலாந்திற்கு அனுப்பியிருக்கிறேன். அங்கு செயல்படும் அமைப்புகள் வறட்சியை போக்கும் வழிமுறைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். வறட்சியை தாங்கி வளரும் பயிர்களை விஞ்ஞான ரீதியாக வடிவமைத்து வருகிறார்கள்.

விவசாய தற் கொலைக்கு தீர்வு வழங்குகிறீர்களா?

தீர்வு வழங்க முடியாது. ஆனால் விழிப்புணர்வை வழங்கலாம். விவசாயிகளை சந்திப்பதன் நோக்கமும் அதுவே. அவர்களுக்கு மன தைரியம் கொடுக்கிறேன். நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குகிறேன். அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க என்னால் முடிந்தவற்றை செய்கிறேன்.

என்னுடைய நடைபயணத்தின் மூலம் கிடைக்கும் நிதியை, தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு வழங்க இருக்கிறேன். மேலும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை பென்ஷன் தொகையாகவும் வழங்க இருக்கிறேன். அதற்கான பணிகளையும் இந்த விழிப்புணர்வு பயணத்தில் மேற்கொண்டிருக்கிறேன்.

தற்கொலை செய்துகொள்வதால் கடன் சுமை தீர்ந்துவிடுமா..? இல்லை. மொத்த கடனும் அவரது மனைவியின் தலையில் தான் விழுகிறது. கூடவே கணவனின் இழப்பும் குடும்பத்தை வாட்டி வதைக்கிறது. இப்படி கணவனை இழந்து கஷ்டப்படும் விவசாய குடும்பங்களுக்கு உதவுவது தான் என்னுடைய பயணத்தின் நோக்கம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள்?

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை நடப்பேன். பிறகு மதியம் 2 மணி வரை ஓய்வு. அதற்கு மேல் நடக்க ஆரம்பித்தால் மாலை 6 மணிக்கு நடைபயணத்தை முடித்துக்கொள்வேன். நடக்கும்போது களைப்பு தெரியாமல் இருக்க இந்திய நண்பர்கள் சுக்மனா, ஜஸ்வீர் சிங்கிடம் இந்தி கற்றுக்கொள்கிறேன். இதனால் நேரம் போவதே தெரியாது. மேலும் தாய்லாந்தில் வாங்கி வந்த கிட்டாரும் என் களைப்பை போக்கி உற்சாக டானிக் தருகிறது.

பயணத்தை மக்கள் வரவேற்கிறார்களா?

சில சமயங்களில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்கள் சுற்றுலா பயணி என நினைத்து கொண்டு என்னிடம் தாறுமாறாக பேரம் பேசினார்கள். பிறகு நடைபயணத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு தன்மையாக நடந்து கொள்வார்கள். தமிழ்நாட்டில் நான் நடந்ததை விட, ஆட்டோவில் ஓசி சவாரி செய்தது தான் அதிகம். ஆட்டோ சவாரிக்கு பணம் கொடுத்த போதும் அதை வாங்க மறுத்துவிட்டனர். திருச்சி மக்கள் வயிறு நிறைய உணவு கொடுத்தனர். திருவண்ணாமலையில் சில விவசாயிகள் என்னுடன் நடந்து வந்து ஆதரவு தெரிவித்தனர். எனக்கு தமிழ் தெரியவில்லை என்றாலும், அவர்களது உடல்மொழியை புரிந்து கொண்டேன். அன்பு பாராட்டுவதில் தமிழ் மக்களை வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்டேன்.

யாருடன் நடக்க ஆசைப்படுகிறீர்கள்?

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியுடன் நடக்க ஆசை. அவருடைய வாழ்க்கை வரலாற்றில் நடைபயணம் எந்தளவிற்கு முக்கியத்துவமானது என்பதை பல புத்தகங்களின் மூலமாகவும், வீடியோக்களின் மூலமாகவும் தெரிந்து கொண்டிருக்கிறேன். 19-ம் நூற்றாண்டில் பிறந்திருந்தால், இங்கிலீஷ்காரன் என்பதை மறந்துவிட்டு இந்தியாவிற்காக காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டிருப்பேன். மேலும் பாப்- மார்லியுடன் நடக்கவும் ஆசை இருக்கிறது.

தமிழகத்தில் பார்த்து வியந்த காட்சி எது?

காஞ்சீபுரத்தை நெருங்கிய சமயம் அது. 90 வயதை கடந்த முதியவர் ஒருவர் ஓலையில் வீடு ஒன்றை பின்னிக்கொண்டிருந்தார். என்னுடைய நண்பரின் மூலம் அவரிடம் பேச ஆரம்பித்தேன். இந்த வயதில் ஏன் இந்த வேலை? என்று கேட்டதற்கு.. “தம்பி இது வேலை இல்லை. என்னுடைய அன்றாட பணி. சோம்பேறியாக அமர்ந்திருக்க உடல் ஒத்துழைக்கவில்லை. அதனால் தான் இந்த வயதிலும் ஏதாவது செய்து கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சிரித்தார். 90 வயதிலும் வேலை பார்க்க துடிப்பவரை இந்தியாவில் தான் பார்க்கிறேன். அதிலும் தமிழகத்தில் தான் பார்த்திருக்கிறேன்.

தற்போது கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டிருக்கும் டேவிட், இதற்கு முன்பாக 19 நாடுகளை நடந்து கடந்திருக்கிறார். உலகை நடந்தே வலம் வருவதுதான் இவருடைய லட்சியம். தன்னுடைய நடைபயணம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதான பிரச்சினைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

Next Story