காங்கிரசார் போராட்டம்: ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட 60 பேர் மீது வழக்கு
குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு கருப்புக்கொடி காட்டி, அவர் கார் மீது கற்கள் வீசப்பட்டது.
குழித்துறை,
குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு கருப்புக்கொடி காட்டி, அவர் கார் மீது கற்கள் வீசப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மார்த்தாண்டம் அருகே சிராயன்குழியில் நேற்றுமுன்தினம் போராட்டம் நடந்தது. இதில், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொருளாளர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பிரதமர் மோடி உருவபொம்மையும், பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா உருவப்படமும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உருவப்பொம்மை எரிப்பு, பொது இடத்தில் அனுமதியின்றி கூடுதல் போன்ற பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.