தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலய திருவிழா சப்பரபவனி கோலாகலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பு


தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலய திருவிழா சப்பரபவனி கோலாகலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Aug 2017 2:30 AM IST (Updated: 5 Aug 2017 11:08 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலய திருவிழா சப்பரபவனி கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலய திருவிழா சப்பரபவனி கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

பனிமயமாதா ஆலயம்

தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு 435–வது திருவிழா கடந்த 26–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர் உள்ளிட்டவை நடந்தது. பல்வேறு தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள் நடத்தப்பட்டன. கடந்த 30–ந் தேதி புதுநன்மை, நற்கருணை பவனியும், நேற்று முன்தினம் பி‌ஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது.

சப்பர பவனி

விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று அன்னையின் சப்பர பவனி நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு கோட்டாறு பி‌ஷப் நசரேன் சூசை தலைமையில் 2–ம் திருப்பலியும், காலை 7.30 மணிக்கு பி‌ஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கூட்டுதிருப்பலியும் நடந்தது. மதியம் 12 மணிக்கு திருச்சி பி‌ஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடந்தது. மாலை 3 மணிக்கு ஜெபமாலை, அருளிக்க ஆசீர் நடந்தது. 5.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடந்தது.

இதைத்தொடர்ந்து நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி ஆலயத்தை சுற்றிலும் மக்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தனர். அங்கு திரண்டு இருந்த மக்கள் சப்பரத்தை தூக்கி வந்தனர். அப்போது மக்கள் ‘மரியே வாழ்க‘ என்று கோ‌ஷம் எழுப்பினர். பவனி வந்த அன்னையை வரவேற்கும் வகையில் இருபுறமும் கட்டிடங்களில் இருந்து ஏராளமான மக்கள் அன்னையை தரிசனம் செய்தனர். இதனால் அன்னையின் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. சாதி, மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் பூக்களை தூவியும், பட்டாசு வெடித்தும், வாணவேடிக்கைகளும் நடத்தப்பட்டது. சப்பரம் ஆலயம் பின்புறமாக பெரியகடை தெரு, கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு வழியாக ஆலய வளாகத்தை வந்தடைந்தது.

பாதுகாப்பு

சப்பர பவனியையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குற்றங்கள் தடுப்பு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விழாவையொட்டி தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் இருந்து ஆலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவையொட்டி நேற்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஆலய உபகாரிகள் மற்றும் திருவிழா நன்கொடையாளர்களுக்கான திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு 2–ம் திருப்பலியுடன் கொடியிறக்கம் நடக்கிறது.


Next Story