கோவில்பட்டியில் 4 நாட்களாக நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்


கோவில்பட்டியில் 4 நாட்களாக நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 6 Aug 2017 2:00 AM IST (Updated: 6 Aug 2017 12:22 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் 4 நாட்களாக நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் 4 நாட்களாக நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

காலவரையற்ற உண்ணாவிரதம்

கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகில் கடந்த 2–ந் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

கோரிக்கையை வலியுறுத்தி, நகர செயலாளர் முருகன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். நேற்று 4–வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நகர செயலாளர் முருகன் 4–வது நாளாக எதுவும் சாப்பிடாததால், மிகவும் சோர்வுடன் கட்டிலில் படுத்து இருந்தார்.

பேச்சுவார்த்தை

பின்னர் மாலையில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், வனத்துறை அலுவலர் சிவராம் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்ட பணிக்காக குருமலை– ஊத்துப்பட்டி இடையே வனப்பகுதியில் 1,700 மீட்டர் தூரத்துக்கு இரும்பு குழாய்கள் பதிக்க வனத்துறையிடம் ஒரு வாரத்தில் அனுமதி பெறப்படும். இதற்காக அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு உள்ளனர். மேலும் 2–வது குடிநீர் திட்டத்துக்காக கோவில்பட்டியில் 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளன. மேலும் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணி அடுத்த வாரத்தில் தொடங்கப்படும். மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மாற்று இடத்தில் கட்ட நகரசபை நிர்வாகம் இடத்தை ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் 2–வது குடிநீர் திட்டத்துக்காக நகரசபை நிர்வாகத்தின் பங்களிப்பான ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

போராட்டம் வாபஸ்

இதனை ஏற்றுக் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் தெரிவித்தார். தொடர்ந்து 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நகர செயலாளர் முருகனுக்கு பழச்சாறு வழங்கி, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.


Next Story