விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ரூ.205 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு அமைச்சர் தகவல்


விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ரூ.205 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 6 Aug 2017 4:30 AM IST (Updated: 6 Aug 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.205 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2015-2016-ம் ஆண்டு நிகர லாபத்தில் கல்வி நிதி, கூட்டுறவு வளர்ச்சி நிதி மற்றும் ஆராய்ச்சி நிதி, விவசாய கடன் அட்டை, வங்கி வாடிக்கையாளர்களுக்கு பற்று அட்டை வழங்கும் விழா வங்கி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். வங்கியின் மேலாண்மை இயக்குனர் ரேணுகா, வங்கி தலைவர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு ரூ.57 லட்சத்து 43 ஆயிரத்து 665 நிதியை வழங்கினார். இந்த நிதிக்கான காசோலையை தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன் பெற்றுக்கொண்டார். முதல் கட்டமாக 7,508 விவசாயிகளுக்கு கடன் அட்டை, 7416 வங்கி வாடிக்கையாளர்களுக்கு பற்று அட்டை ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 253 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் உள்பட பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த 2 மாவட்ட மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உறுதுணையாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் இருந்து ரூ.1,307 கோடியே 31 லட்சம் வைப்புதொகையாகவும், ரூ.1,140 கோடியே 34 லட்சம் அளவில் பயிர்க்கடன் மற்றும் இதர கடன்களும் வழங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.205 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 10,415 விவசாயிகளுக்கு ரூ.51 கோடியே 85 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வங்கி வாயிலாக தமிழக அரசு அறிவித்த சிறு,குறு விவசாய கடனுதவி ரூ.225 கோடியே 58 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

நிகழ்ச்சியில் துணைபதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வேலுமணி, இயக்குனர்கள் பொன்னுவேல், கவுதமன்,ரவி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் சின்.அருள்சாமி, முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.ரெங்கநாதன் மற்றும் வங்கி இயக்குனர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story