எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு


எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
x
தினத்தந்தி 6 Aug 2017 4:30 AM IST (Updated: 6 Aug 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

வனத்துறை சார்ந்த பல்வேறு பணிகள் குறித்த எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வனத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் மொத்த நில பரப்பளவில் 3.6 சதவீதம் வனங்களாகும். இதில் மொத்தம் 5,566.88 எக்டேர் பரப்பளவில் வன வளங்கள் அமைந்துள்ளன. அரசாணை எண் 798-வனம் மற்றும் மீன்துறை நாள் 23.7.1986-ன் படி நாகை வன உயிரின கோட்டம் உருவாக்கப்பட்டது. இக்கோட்டம் நாகை, வேதாரண்யம், சீர்காழி ஆகிய வனச்சரகங்களை உள்ளடக்கியது. மேலும் 2004 சுனாமி பேரலைக்கு பின்னர் கடற்கரையோர இயற்கை வளங்களை பெருக்குவதற்கு சிறப்பு சரகங்கள் உருவாக்கப்பட்டன. இயற்கை சீற்றத்தை தடுக்க உற்பத்தி செய்யப்பட்டுள்ள உயிர் அரண், சவுக்கு மற்றும் பல வகை தோட்டங்களும் உள்ளன. நாகை மாவட்டத்தில் சிறப்பு மிக்க கோடியக்கரை வன உயிரின சரணாலயம், பறவைகள் சரணாலயம் மற்றும் சதுப்பு நிலக்காடுகளும் உள்ளன. இச்சரணாலயம் 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு 17.29 சதுர கி.மீ. ஆகும். இப்பகுதி வேதாரண்யத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்காட்டில் 80 வகை அரிய மூலிகைகளும், மருத்துவ செடிகளும் உள்ளன. இச்சரணாலயத்தில் வெளிமான்கள், புள்ளி மான்கள், குதிரை, நரி, காட்டுப்பன்றி, மற்றும் பலவகையான பறவைகளும் உள்ளன.

2016-17-ம் ஆண்டில் நாகை வன உயிரின கோட்டத்தில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் பல்லுயிர் பாதுகாத்தலுக்கான செயல் விளக்க கூடம், கடல் ஆமை பாதுகாத்தல், கருவேல மரங்களை அகற்றுதல் மற்றும் ஈரப்புல நில மேலாண்மை செய்யும் பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மத்திய பங்களிப்பு திட்டதின் கீழ் கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் ஒருங்கிணைந்த வன ஓய்விடம் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், விலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுத்தல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் சரணாலயத்தை சுற்றி தடுப்புச்சுவர் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்றுள்ளது. தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் வனத்துறை சார்ந்த பல்வேறு பணிகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வேதாரண்யம் சரகத்தை சேர்ந்த 3 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.1.40 லட்சத்துக்கான காசோலை, 5 பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் ஆகியவற்றை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ் (பூம்புகார்), பாரதி (சீர்காழி), ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), மதிவாணன் (கீழ்வேளூர்), தமிமுன்அன்சாரி (நாகை), மண்டல வன பாதுகாவலர் திருநாவுக்கரசு, மாவட்ட வன உயிரின காப்பாளர் வித்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story