எங்கள் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது பெரம்பலூர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


எங்கள் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது பெரம்பலூர் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 6 Aug 2017 5:00 AM IST (Updated: 6 Aug 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

எங்கள் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பெரம்பலூர்,

அ.தி.மு.க. நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல் - அமைச்சருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தமிழக அரசின் சார்பாக கடந்த 30-6-2017 அன்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

அந்த வரிசையில் பெரம்பலூரில் ஆகஸ்டு 5-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த அறிவிப்பின்படி பெரம்பலூரில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரை என்ற இடத்தில் விழா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. பெரம்பலூர் நகரம் முழுவதும் அ.தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டு இருந்தது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி நேராக திருச்சியில் இருந்து கார் மூலம் பெரம்பலூர் சுற்றுலா மாளிகைக்கு வந்தார். சுற்றுலா மாளிகை வாசலில் அவருக்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, இளம்பை இரா. தமிழ்செல்வன் எம்.எல்.ஏ ஆகியோர் சால்வை அணிவித்து அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நேற்று மாலை 5 மணி அளவில் தொடங்கியது. விழாவுக்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவ படத்தை திறந்து வைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அரசு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

உலகிலேயே எம்.ஜி.ஆர் என்பவர் ஒருவர் தான். வேறு எம்.ஜி.ஆர் கிடையாது. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் பெண் எம்.ஜி.ஆராக மக்கள் மனதில் இடம் பிடித்து எவ்வளவோ திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார். அதன் மூலம் அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

இதனை எதிர்கட்சிகாரர்கள் கூட பாராட்டி பேசி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் திறந்த இதயத்துடன் வாழ்ந்தார்கள். இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் மனதில் இருந்து அவர்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.

திரைப்படத்துறையில் எம்.ஜி.ஆர் கொடிகட்டி பறந்தார். மக்களுக்கு ஆற்றிய பணிகளால் முதல்-அமைச்சரானார். பொதுமக்களுக்கு எம்.ஜி.ஆர் போல் உதவியவர்கள் யாரும் கிடையாது. அவர் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர். நடிகர்களாக இருந்து எம்.ஜி.ஆர் போல் ஆகவேண்டும் என நினைப்பவர்கள், ஒருபோதும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதை தான் நினைவுக்கு வருகிறது. எம்.ஜி.ஆரை போல் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் பல தியாகங்களை செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாதவர்களால், ஒரு போதும் புனித ஜார்ஜ் கோட்டையை பிடிக்க முடியாது.

கழக தொண்டர்கள் தியாகத்துடனும், விசுவாசத்துடனும் இருந்து இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். ஜெயலலிதா வழியில் இந்த ஆட்சி மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பணிகளை விரிவாக்கம் செய்ய தமிழகத்தில் உள்ள 2,065 ஏரிகளை தூர்வார ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள். சிலர் குழப்ப பார்க்கிறார்கள். ஆட்சியை கலைக்க வேண்டும் என முற்படுகிறார்கள். அவர்களால் எதுவும் செய்து விட முடியாது. ஜெயலலிதா ஆத்மா இருக்கும் வரை இந்த ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவுக்கு வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் உள்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் வெங்கடேஷன் வரவேற்று பேசினார். முடிவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நன்றி கூறினார்.

முன்னதாக எம்.ஜி.ஆர். பற்றிய இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

Next Story