தனியார் நிறுவன காசோலையை திருடி சேலம் வங்கியில் ரூ.93 லட்சம் பெற முயற்சி; பெண் கைது


தனியார் நிறுவன காசோலையை திருடி சேலம் வங்கியில் ரூ.93 லட்சம் பெற முயற்சி; பெண் கைது
x
தினத்தந்தி 6 Aug 2017 3:45 AM IST (Updated: 6 Aug 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன காசோலையை திருடி சேலம் வங்கியில் ரூ.93 லட்சம் பெற முயன்ற நாகர்கோவில் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரது நிறுவனத்தில் இருந்து ரூ.93 லட்சத்துக்கு காசோலை கொடுக்கப்பட்டதாக சேலம் 5 ரோட்டில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் தொண்டு நிறுவனம் சார்பில் கலெக்சனுக்காக போடப்பட்டது.

அதை உறுதி செய்யும் வகையில் சேலத்தில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து சென்னையில் உள்ள மூர்த்தியிடம் தொடர்பு கொண்டு அதிகாரி ஒருவர் கேட்டார். அப்போது மூர்த்தி, நாங்கள் யாருக்கும் ரூ.93 லட்சத்துக்கான காசோலை கொடுக்கவில்லை என்றார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரி, காசோலைக்கான பணத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்தார்.

இது தொடர்பாக சேலம் பள்ளப்பட்டி போலீசில் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த தர்மலிங்கம், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த சண்முகம் உள்பட 4 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மூர்த்தி மேலாளராக பணிபுரியும் நிறுவனத்தில் கையெழுத்திடப்பட்ட காசோலையை அவர்கள் திருடி உள்ளனர். பின்னர் அதை சேலத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் நாகர்கோவில் சைமன் நகரை சேர்ந்த கிளாடிஸ்விஜி என்பவர் மூலம் ரூ.93 லட்சம் என காசோலையில் நிரப்பி வங்கியில் வசூலுக்கு போடப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கிளாடிஸ்விஜியை பிடிக்க சேலம் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜான் எட்வர்டு தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கிளாடிஸ்விஜியின் செல்போன் எண்ணை வைத்து கண் காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவர், சொந்த ஊரான நாகர்கோவில் சைமன் நகர் வீட்டில் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகர்கோவில் சென்று, அங்கு கிளாடிஸ்விஜியை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். சேலத்தில் நேற்று அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுபோன்று வேறு காசோலைகளை வைத்து வங்கியில் பணம் பெற்றுள்ளாரா? என்றும், வேறு யாரெல்லாம் இந்த மோசடியில் தொடர்பில் உள்ளனர்? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

Related Tags :
Next Story