நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் கைது


நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2017 3:30 AM IST (Updated: 6 Aug 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி, 

மதுரவாயல் ஆலப்பாக்கம் ஏரிக்கரை காந்தி நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன்(வயது 40). தையல்காரர். இவருடைய மனைவி பிரியா(32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். தனது மனைவி பிரியாவின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

கழுத்தை அறுத்தார்

நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த கஜேந்திரன், இது தொடர்பாக மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவி பிரியாவின் கழுத்தை அறுத்தார்.

வலியால் அலறி துடித்த பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் பயந்து போன கஜேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் பிரியாவை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கணவர் கைது

இது குறித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஜேந்திரனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி, அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து உள்ளார். ஆனால் தனக்கு திருமணமான விவரத்தை மறைத்து பிரியாவை 2-வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்து உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பிரியாவுக்கு இந்த தகவல் தெரிந்தது. அன்று முதல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரது கழுத்தை கத்தியால் அறுத்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான கஜேந்திரனை போலீசார் சிறையில் அடைத்தனர். 

Next Story