மாநகர பஸ் மோதியதில் படுகாயம் அடைந்த போலீஸ் ஏட்டு சிகிச்சை பலனின்றி சாவு


மாநகர பஸ் மோதியதில் படுகாயம் அடைந்த போலீஸ் ஏட்டு சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 6 Aug 2017 3:45 AM IST (Updated: 6 Aug 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

பெரவள்ளூரில் மாநகர பஸ் மோதியதில் படுகாயம் அடைந்த போலீஸ் ஏட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 45). இவர் வியாசர்பாடி போக்குவரத்து போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாநகர பஸ் அவர் மீது மோதியது.

இதில், தலையில் பலத்த காயம் அடைந்த பொன்னுசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த நிலையில், பொன்னுசாமிக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் மற்றும் உடன் பணியாற்றிய போலீசார் சிலர் குற்றம் சாட்டி பிரச்சினையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது உறவினர்களிடம் உறுதி அளித்தனர்.

பின்னர் பொன்னுசாமி அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று முன்தினம் இரவு பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த அருண்குமார் (29) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story