பனியன் நிறுவன தொழிலாளியிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை


பனியன் நிறுவன தொழிலாளியிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 6 Aug 2017 4:00 AM IST (Updated: 6 Aug 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாளரா? என்ற சந்தேகத்தின் பேரில் திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளியிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்,

அரபு நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆதரவு அளித்து ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுகிறார் களா? என்று நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்களுடன் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்து வந்தது தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு கோவையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் முகாமிட்டு 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை துணை சூப்பிரண்டு சவுகத் அலி தலைமையிலான அதிகாரிகள் கோவைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் வந்து 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அவர்களின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அவர்களுக்கும், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

இவர்களுடன் வேறு யாரும் தொடர்பில் இருந்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 பேர் திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக்(30) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பனியன் தொழிலாளியான இவர் ஐ.எஸ். இயக்கம் தொடர்பான முகநூலுடன் தொடர்பில் இருந்ததாக கூறி அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். காலை முதல் இரவு வரை அப்துல் ரசாக்கிடம் விசாரணை நடத்தி விட்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

ஏற்கனவே திருப்பூர் கோழிப்பண்ணை பகுதியில் 6 ஆண்டுகளாக குடும்பத்துடன் பதுங்கியிருந்து மளிகை கடை நடத்தி வந்த ஐ.எஸ். இயக்க ஆதரவாளரான மேற்கு வங்காளத்தை சேர்ந்த முகமது மொசுருதீனை(28) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நிலையில் திருப்பூரில் மேலும் ஒரு வாலிபரிடம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story