பழனி அருகே மூளைக்காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி பலி பொதுமக்கள் அச்சம்


பழனி அருகே மூளைக்காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி பலி பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 6 Aug 2017 5:30 AM IST (Updated: 6 Aug 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே மூளைக் காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார். இதனால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

நெய்க்காரப்பட்டி,

பழனி அருகே உள்ள தெற்கு தாதநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்பச்சாமி. கூலித்தொழிலாளி. அவருடைய மகள் காயத்ரி (வயது 17). நெய்க்காரப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். காயத்ரிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் காய்ச்சல் குறையவில்லை. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக இறந்தார். மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பழனி பகுதிகளில் ஏற்கனவே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 17 பேர் இறந்துள்ளனர். தற்போது மூளைக் காய்ச்சலால் பிளஸ்-2 மாணவி இறந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் சுகாதாரத்துறையினர் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, ‘காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி காய்ச்சல் பாதித்தவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி குடிக்க வேண்டும், குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை’ என்றனர்.

Next Story