பதவி விலகக்கோரி மந்திரி பிரகாஷ் மேத்தா வீட்டின் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
வீட்டுவசதி துறை மந்திரி பிரகாஷ் மேத்தா பதவி விலக கோரி அவரது வீட்டின் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை,
வீட்டுவசதி துறை மந்திரி பிரகாஷ் மேத்தா குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், எனவே அவர் பதவி விலக கோரி அவரது வீட்டின் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரகாஷ் மேத்தாமராட்டிய வீட்டுவசதி துறை மந்திரி பிரகாஷ் மேத்தா குடிசை சீரமைப்பு திட்டத்தில் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்த முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.
பரபரப்பான இந்த சூழலில், மந்திரி பிரகாஷ் மேத்தா மீது புதிய குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.
அதாவது, குடிசை சீரமைப்பு திட்ட பயனாளிகளின் பட்டியலில் பிரகாஷ் மேத்தாவின் மகன் பெயரும், உறவினர்களின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் சட்டசபையில் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்இந்த முறைகேடுகளுக்கு பொறுப்பு ஏற்று, மந்திரி பிரகாஷ் மேத்தா பதவி விலகுமாறு மும்பை புறநகர் காட்கோபரில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை மண்டல காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தலைமை தாங்கினார். அப்போது, பிரகாஷ் மேத்தாவுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, சஞ்சய் நிருபம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பிற வழிமுறைகள்ஊழல் கறைபடிந்த மந்திரி மீது நடவடிக்கை எடுக்காமல், தூய்மையான அரசை நடத்துகிறேன் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எப்படி சொல்கிறார்? யாருடைய அழுத்தத்தின்பேரில், பிரகாஷ் மேத்தாவை பதவி விலக சொல்லவில்லை என்பதை பட்னாவிஸ் தெளிவுபடுத்தட்டும்.
இந்த பிரச்சினை காரணமாக சட்டசபையின் அலுவல் பணிகள் கடந்த 2 வாரமாக முடங்கி போய்விட்டது. நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் (வருகிற 11–ந் தேதி) பிரகாஷ் மேத்தா பதவி விலகவில்லை என்றால், அவரை வெளியேற்ற பிற வழிமுறைகளை காங்கிரஸ் கையாளும்.
இவ்வாறு சஞ்சய் நிருபம் தெரிவித்தார்.