விவசாய கடனை தள்ளுபடி செய்ய கவர்னருக்கு மனமில்லை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி


விவசாய கடனை தள்ளுபடி செய்ய கவர்னருக்கு மனமில்லை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
x
தினத்தந்தி 6 Aug 2017 4:15 AM IST (Updated: 6 Aug 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் ரூ.22 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ய கவர்னருக்கு மனமில்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி,

ராகுல்காந்தி மீது குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் ஆதாயம் தேட...

குஜராத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி மீது பா.ஜ.க. கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. அரசியல் அதிகாரத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை புதுவை மாநில காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

பா.ஜ.க. அரசு நாடு முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு கலவர சூழலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. அவர்களின் கனவு நிச்சயம் பலிக்காது. தேசம் காத்த தியாகப் பரம்பரை மீது தாக்குதல் நடத்தி இருப்பது வெட்கக்கேடானது. இதற்கு மக்கள் மன்றத்தில் பா.ஜ.க. பதில் சொல்லியே ஆகவேண்டும்.

கவர்னருக்கு மனமில்லை

டெல்லியில் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் கேட்பாரற்ற நிலையில் உள்ளனர். அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண பா.ஜ.க. அரசுக்கு எண்ணம் இல்லை. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது ரூ.70 ஆயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார்.

புதுவையில் தற்போது ரூ.22 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி அமைச்சரவை முடிவு எடுத்து கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் தராமல் மத்திய அரசுக்கு அந்த கோப்பை அனுப்பி வைத்துள்ளார். விவசாய கடனை தள்ளுபடி செய்துதர கவர்னருக்கு மனமில்லை. 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story