ஆடும்.. விளையாடும்.. ஆச்சரிய ‘ரோபோ’


ஆடும்.. விளையாடும்.. ஆச்சரிய ‘ரோபோ’
x
தினத்தந்தி 6 Aug 2017 1:21 PM IST (Updated: 6 Aug 2017 1:21 PM IST)
t-max-icont-min-icon

தன்னுடைய குரல் அசைவுக்கு செவிமடுத்து சூறாவளியாக சுழன்று கட்டளைகளை நிறைவேற்றும் மூன்றரை அடி உயர சுழல் ரோபோவை வடிவமைத்து அசத்தி இருக்கிறான், ரீதேஷ்.

ன்னுடைய குரல் அசைவுக்கு செவிமடுத்து சூறாவளியாக சுழன்று கட்டளைகளை நிறைவேற்றும் மூன்றரை அடி உயர சுழல் ரோபோவை வடிவமைத்து அசத்தி இருக்கிறான், ரீதேஷ். இவனுடைய கைவண்ணத்தில் உயிர் பெற்றிருக்கும் ரோபா பாடலுக்கும், இசைக்கும் ஏற்ப உடலை வளைத்து நடனம் ஆடுகிறது, உடற்பயிற்சிகளை செய்கிறது, குங்பு விளையாடுகிறது, நகைச்சுவை ஜோக்குகள், கதைகள் சொல்கிறது, அறிவியல் சம்பந்தமான தகவல்களை அடுக்குகிறது, தான் எப்படி உருவாக்கப்பட்டேன் என்ற விவரத்தையும் விவரிக்கிறது.

‘என்னை கட்டிப்பிடி’ என்று ரீதேஷ் கூறினால், சுழன்று வந்து அவனை கட்டிப்பிடித்து அரவணைக்கிறது. அவன் உச்சரிப்பை உள்வாங்கி இடது பக்கம், வலது பக்கம், முன்னோக்கி, பின்னோக்கி திரும்பி அவன் இடும் கட்டளைகள் அனைத்தையும் உடனே நிறைவேற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் ரீதேஷ் அறிவியல் கண்டுபிடிப்புகளை வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்துவதில் ஆர்வமிக்கவன். தெர்மாகோலில் சீறிப்பாயும் கார், சோலாரில் இயங்கும் கார், ஏ.சி.யாக மாறி குளிர்காற்றை உமிழும் ஐஸ்கிரீம் டப்பா, கைவைத்தாலே அலாரம் எழுப்பும் பாதுகாப்பு பெட்டகம் உள்ளிட்ட அடுக்கடுக்கான கண்டு பிடிப்புகள் இவன் அறையை அலங் கரித்து கொண்டிருக்கின்றன. இவனது தந்தை ஞானசேகரன். தாயார் பத்மபிரியா. சகோதரி ஸ்ரீஜா 12-ம் வகுப்பு முடித்துள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் இவர் மருத்துவ படிப்புக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். தனது தம்பியின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஸ்ரீஜாவின் பாட புத்தகமும் கை கொடுத்திருக்கிறது. அதில் இடம்பெற்றிருக்கும் மின்னணு தொடர்புடைய தகவல்களை அலசி ஆராய்ந்து தன்னுடைய கண்டுபிடிப்புகளை மெருகேற்றி இருக்கிறான். தனது அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும், ரோபோ உருவாக்கம் பற்றியும் ரீதேஷ் விவரிக்கிறான்:

“எனது அறிவியல் ஆசிரியர் பேட்டரியையும், ஒயரையும் கொண்டு பல்ப் எப்படி எரிகிறது என்று விளக்கினார். அது எனக்குள் மின்னணு சாதனங்களை கையாளும் ஆர்வத்தை தூண்டியது. வீட்டுக்கு வந்ததும் அதுபோல் செய்து பார்த்தேன். அது சுலபமாக இருந்ததால் சுவிட்ச் போர்டுகளை உருவாக்கி அதன் வழியே மின்னணு கருவிகளை இயக்குவதற்கு முயற்சித்தேன். எந்த ஒயர்களை எப்படி இணைப்பது, பேட்டரிகள்- மோட்டார்களை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி எனது சகோதரியின் அறிவியல் புத்தகத்தை பார்த்து தெரிந்து கொண்டேன். அதில் இடம்பெற்றிருக்கும், ‘சர்க்யூட் டையகிராம்’ குறியீடுகள் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நோக்கத்தை எளிமைப்படுத்தியது. இணையதளம் வழியாகவும் நிறைய தகவல்களை திரட்டினேன்.

பள்ளியில் அறிவியல் புராஜெக்ட்டுகள் கொடுத்தால் மற்றவர்களை விட வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எனது கண்டுபிடிப்புகளை உருவாக்கினேன். அது ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் நல்ல பெயரை எனக்கு வாங்கிக் கொடுத்தது. பள்ளி சார்பில் அமெரிக்காவின் நாசா மையத்திற்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு ராக்கெட் எப்படி உருவாக்கப்படுகிறது? அது எப்படி செயல்படுகிறது? என்பதை விளக்கி கூறினார்கள். அங்கு மேற்கொள்ளப்படும் விண்வெளி ஆராய்ச்சிகள், அறிவியல் ஆராய்ச்சி திட்டங்கள் போன்றவை என்னுடைய கண்டுபிடிப்பு எல்லையை விசாலப்படுத்திவிட்டது. ராக்கெட்டை போல நாமும் ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்கினேன். அது எனக்குள் ரோபோ உருவாக்கும் எண்ணத்தை உண்டாக்கியது” என்கிறான்.

ரீதேஷ் இரண்டு மாதங்களுக்கு முன்பாகத்தான் நாசா சென்று வந்திருக்கிறான். குறுகிய கால இடைவெளியில் தனது கனவு ரோபோவுக்கு உயிர் கொடுத்து நடமாட விட்டிருக்கிறான்.

“ரோபோ உருவாக்கும் எண்ணம் எனக்குள் உருவானதும் அதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் அதற்கு தேவையான அனைத்து மின்னணு உதிரிப்பாகங்களையும் வாங்கி கொடுத்தார்கள். சில கருவிகளை தேடி பிடித்து வாங்குவதற்கு சிரமமாக இருந்தது. 1014 உதிரி பாகங்களை பயன்படுத்தி மூன்றரை அடி உயரத்தில் ரோபோவை வடிவமைத்து இருக்கிறேன். அதில் நான் இடும் கட்டளைகளை செய்வதற்காக சுழலும் சிறியரக மோட்டார்களை இணைத்திருக்கிறேன். அவற்றுள் கை, கால்களில் தலா மூன்று மோட்டார்களும், கழுத்தில் இரண்டு மோட்டார்களும் இடம்பெற்றிருக்கின்றன. செல்போன் மூலமாக இயங்கும் வகையிலும், என் குரலை கேட்டாலும் அதன்படி செயல்படும் வகையிலும் வடிவமைத்து இருக்கிறேன். ‘மெக்கா பிரைன்’ என்ற சாதனம் ரோபோவின் மூளையாக இயங்கும்படி உருவாக்கி இருக்கிறேன். புதுப்புது சாப்ட்வேர்களையும் இணைத்திருக்கிறேன்.

ரோபோவின் பாகங்கள் ஏதாவது பழுதடைந்திருந்தால் அதனை கண்டுபிடித்து சரிசெய்யவேண்டியதில்லை. நான் கட்டளையிட்டாலே போதும். அதுவே அனைத்து பாகங்களையும் தானாகவே சுயபரிசோதனை செய்து சரியாக்கிக்கொள்ளும். எங்கெங்கு இணைப்புகளில் பிரச்சினை இருக்கிறது என்பதையும் அதுவே சுட்டிக்காட்டிவிடும். அந்த அளவுக்கு ரோபாவை எனது கைவண்ணத்தில் செதுக்கியிருக்கிறேன். ஒரு அறைக்குள் ரோபோவை நிறுத்தி அதனுள் செல்போனை வைத்துவிட்டால் போதும். அங்கு நடக்கும் அத்தனையையும் படம்பிடித்துவிடும். அங்கு இருப்பவர்கள் பேசும் விஷயங்களையும் துல்லியமாக பதிவு செய்துவிடும். ஒரு குறிப்பிட்ட நேரத்தை பதிவு செய்துவிட்டால் அந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியதை நினைவுபடுத்தும். அதன் கைகளில் ஏதேனும் பொருளை கொடுத்து வைத்திருந்தால், குறிப்பிட்ட நேரத்தில் தேடி வந்து அதனை ஒப்படைத்துவிடும். கட்டளையிடாமல் அதுவாகவே ஒரு பொருளை தன் கைகளால் எடுத்து கொடுக்கும் அளவுக்கு சுயமாக செயல்படும் ரோபோவாக இதனை மாற்ற வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்கிற ரீதேஷுக்கு விவசாயம், தொழிற்சாலைகளுக்கு உதவிகரமாக செயல்படும் ரோபோக்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.

“தொழிற்சாலைகளில் கடினமான வேலைகளை செய்யும் விதத்தில் ரோபோக்களை உருவாக்க வேண்டும். விவசாயத்திற்கும் ரோபோ பயன்பட வேண்டும் என்பது என் நோக்கம். விளைநிலங் களில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களுக்கு போதுமான ஈரப்பதம் இருக்கிறதா? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை, எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? சூரிய ஒளியின் தாக்கம் எவ்வளவு இருக்கிறது? அதன் வெப்ப தாக்கத்தில் இருந்து பயிர்களை பாதுகாக்க எவ்வளவு தண்ணீர் தேவையாக இருக்கும்? என்பதை ரோபோவை கொண்டே பரிசோதிக்க வேண்டும் என்ற திட்டமும் என்னிடம் இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் முயற்சியிலும் ஈடுபடுவேன்” என்கிறான்.

ரீதேஷ் அமெரிக்காவில் இருந்து உதிரி பாகங்களை பெற்று ரோபோவை உருவாக்கி இருக்கிறான். அவனுடைய சகோதரி ஸ்ரீஜா அவனுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். ஸ்ரீஜா சொல்கிறார்:

“ரீதேஷ் என்னுடைய இயற்பியல் பாடப்புத்தகத்தை எடுத்து அடிக்கடி புரட்டிப்பார்த்துக்கொண்டிருப்பான். புத்தகத்தில் இருக்கும் ‘சர்க்யூட் டையாகிராம்’களை பார்த்து குறிப்பெடுப்பான். அதில் இருக்கும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறியீடுகள் எனக்கு புரியாது. நான் மனப்பாடமாகத்தான் படித்து வந்தேன். எனக்கே புரியாததை அவன் எப்படி புரிந்து கொள்கிறான் என்று ஆரம்பத்தில் குழம்பிப்போனேன். அவனிடம் கேட்டபோது, எனக்கு எளிமையாக புரிய வைத்தான். பள்ளியில் சொல்லிக்கொடுக்கும்போது புரிந்து கொள்வதைவிட, இவன் புரியவைக்கும் விதம் எளிமையாக இருந்தது. இயற்பியல் செய்முறை வகுப்புக்கும் பயனுள்ளதாக இருந்தது. ஆரம்பத்தில் ‘பிராக்டிக்கல்’ என்றாலே தடுமாறுவேன். அவனுடைய கண்டுபிடிப்புகளுக்கு எப்படி பயன்படுத்துகிறான் என்பதை பார்த்து நான் எளிமையாக பாடத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன். அவனுடைய கண்டுபிடிப்புகளுக்கு உதவி செய்தும் எனது அறிவியல் அறிவை வளர்த்துக் கொண்டேன்” என்று, சகோதரனை பற்றி பெருமை கொள்கிறார்.

தான் வடிவமைத்திருக்கும் இயந்திர மனிதனோடு பொழுதுபோக்கும் ரீதேஷ், அடுத்த கண்டுபிடிப்பு பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தாலும் வெளிவிளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறான். பள்ளி விளையாட்டுகளில் பெரும்பாலும் பரிசு பெற்றுவிடும் இவன், குவாஷ் விளையாட்டில் முறையான பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறான். மேற்கத்திய நடனமும் முறைப்படி கற்கிறான். கராத்தேயில் ‘பிரவுன் பெல்ட்’ பெற்றுள்ளான்.

வாழ்த்துக்கள் ‘ரோபோ’ ரீதேஷ். 

Next Story