நாகர்கோவிலில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி


நாகர்கோவிலில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி
x
தினத்தந்தி 7 Aug 2017 4:30 AM IST (Updated: 6 Aug 2017 10:33 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி நேற்று நடந்தது. இதில் பல்வேறு விதமான நாய்கள் பங்கேற்றன.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கெனல் கிளப் சார்பில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கிளப் செயலாளர் பார்வதி விஜயகுமார் தலைமை தாங்கினார். கண்காட்சியில் பங்கேற்பதற்காக புனே, இமாசல பிரதேசம், மத்திய பிரதேசம், மும்பை, டெல்லி, பெங்களூரு, கேரளா மற்றும் நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு விதமான நாய்கள் அழைத்து வரப்பட்டன. 38 இனங்களில் சுமார் 300 நாய்கள் இதில் பங்கேற்றன.

கண்காட்சியில் கலந்துகொண்ட நெல்லை மாவட்டம் சாயமலை சிலம்புராபுரம் வேட்டைநாய்கள் பார்வையாளர்களை கவரும் விதமாக இருந்தன. நீண்ட கால்களையும், கூர்மையான முகத்தையும் கொண்ட இந்த இன நாய்கள் வேட்டைக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை நாய்குட்டி ரூ.10 ஆயிரத்துக்கு கிடைக்கும் என்றும், வளர்ந்து நன்கு பயிற்சி பெற்ற நாய்கள் எனில் ரூ.1 லட்சத்துக்கு கிடைக்கும் என்றும் அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதற்கு அடுத்தபடியாக செயின்ட் பெர்னாட் என்ற நாய் அனைவரையும் கவர்ந்தது. இந்த நாய்கள் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டன. செயின்ட் பெர்னாட் இன நாய்கள் அமெரிக்காவில் கிடைப்பதாகவும், இந்த இன நாய் குட்டி ரூ.5 லட்சத்துக்கு விற்கப்படுவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தார்கள்.

இதுபோல பிரஞ்சு புல்டாக், அமெரிக்கன் போகர், கோல்டன் ரெட்ரீவர், ஜெர்மன் ஷெப்பர்ட், ராஜபாளையம் நாய், மதுரை ரேடன் உள்ளிட்ட இன நாய்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. மேலும், குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் பயன்படுத்தும் நாய்களும் கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்டிருந்தன. அமெரிக்கன் போகர் இன நாய்களுக்கு நீலமான கூந்தல் இருந்தது. பெண்கள் போல ஜடை பின்னப்பட்டு பார்ப்பதற்கு வித்தியாசமாக காட்சியளித்தது. மதுரை ரேடன் இன நாய் மிகவும் உயரமாகவும், கம்பீரமாகவும் காட்சி அளித்தது.

அதன் பிறகு நாய்களுக்கு வேகமாக ஓடுதல், பந்தை கவ்வுதல் உள்ளிட்ட சில போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story