தனுஷ்கோடி புதிய சாலையில் அனைத்து வாகனங்களையும் அனுமதிக்க கோரிக்கை


தனுஷ்கோடி புதிய சாலையில் அனைத்து வாகனங்களையும் அனுமதிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 7 Aug 2017 4:00 AM IST (Updated: 7 Aug 2017 12:02 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி புதிய சாலையில் அனைத்து வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. கடந்த 1964–ம் ஆண்டுக்கு முன்பு பெரிய துறைமுக நகரமாக திகழ்ந்தது. இங்கு ஏராளமான வீடுகள், தபால் அலுவலகம், ரெயில் நிலையம், அனைத்து மத வழிபாட்டு தலங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இருந்தன. சென்னையில் இருந்து வரும் ரெயில் நேரடியாக தனுஷ்கோடிக்குத்தான் செல்லும். இதேபோல தனுஷ்கோடி–தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தும் இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 1964–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23–ந்தேதி நள்ளிரவில் ஏற்பட்ட கோரப்புயலில் தனுஷ்கோடி நகரம் அடியோடு அழிந்தது. இதில் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பிறகு தனுஷ்கோடி நகரத்தை புனரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் முகுந்தராயர் சத்திரம் வரை சென்று அங்கிருந்து மீன் வண்டிகள், வேன்கள் மூலம் கடற்கரையோரம் ஆபத்தான பயணம் மேற்கொண்டு தனுஷ்கோடி வரை சென்று பார்த்து வந்தனர். மேலும் பொதுமக்கள் நலன் கருதி தனுஷ்கோடி வரை சாலை அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் 53 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு ரூ.50 கோடி செலவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைத்தது. இதனை கடந்த மாதம் 27–ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததை தொடர்ந்து புதிய சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அன்று முதல் தனுஷ்கோடியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் புதிய சாலையில் சென்று வருகின்றனர். புயலால் அழிந்து போன கட்டிடங்களை பார்வையிட்டு வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர். புதிய சாலை பயன்பாட்டுக்கு வந்தது முதல் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு வருவது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அரிச்சல் முனை பகுதியில் தூய்மை பணியை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் நடராஜன், அரிச்சல்முனைக்கு புதிய சாலையில் தனியார் வாகனங்கள் செல்வது விரைவில் தடை செய்யப்படும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் முகுந்தராயர் சத்திரம் வரை தான் அனுமதிக்கப்படும். அதற்கு மேல் அரசு பஸ்சில் தான் அனைவரும் சென்றுவர வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிலையில் தனுஷ்கோடி புதிய சாலையில் அனைத்து வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன் கூறும்போது, உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வடகடலும், தென்கடலும் சங்கமிக்கும் இடமான தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்று பார்ப்பதற்கு விரும்புகின்றனர். இந் நிலையில் பொதுமக்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு 53 ஆண்களுக்கு பிறகு சாலை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இதில் தற்போது சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை வரை சென்று கடலில் அழகையும், புயலால் அழிந்து போன தனுஷ்கோடி நகரையும் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு செல்ல தனியார் வாகனங்களை அனுமதிப்பதில்லை என்பது ஏற்புடையதுஅல்ல. இது சுற்றுலா பயணிகளையும், பக்தர்களையும் மனவருத்தம் அடையச்செய்யும். எனவே அனைத்து வாகனங்களும் அரிச்சல்முனை வரை சென்று வர அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

சென்னையில் இருந்து குடும்பத்துடன் தனுஷ்கோடிக்கு வந்திருந்த செல்வம்–தேவி ஆகியோர் கூறும்போது, தனுஷ்கோடி புண்ணிய தலமாகும். இங்கு வருவது புனிதமானது. தனுஷ்கோடிக்கு புயலுக்கு பிறகு பொதுமக்கள் வந்து செல்வது மிகவும் சிரமமாக இருந்து வந்தது. தற்போது நேரடியாக அங்கு செல்ல சாலை அமைத்திருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது. இவ்வாறு சாலை அமைத்த பிறகு தனியார் வாகனங்களை அனுமதிக்கமாட்டோம் என்பது வேடிக்கையாக உள்ளது. அந்த புனித நகரத்தை புனரமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அங்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். அந்த நகரை மீண்டும் புத்துயிர் பெற வழிவகை செய்ய வேண்டும்.

சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி கடலின் ஆபத்து குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. மற்ற கடற்கரைகளை போல எண்ணி குளிக்க முற்படுகின்றனர். எனவே ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைப்பதுடன் பாதுகாப்புக்கு போலீசாரை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதேபோல புதிதாக அமைக்கப்பட்ட தனுஷ்கோடி சாலையில் தனியார் வாகனங்களை அனுமதிப்பதில்லை என்ற மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு ராமேசுவரம் பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Next Story