தமிழக–கேரள எல்லையில் ரூ.10 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்


தமிழக–கேரள எல்லையில் ரூ.10 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Aug 2017 4:45 AM IST (Updated: 7 Aug 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

தமிழக– கேரள எல்லையில் ரூ.10 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

செங்கோட்டை,


தமிழக–கேரள எல்லையான கோட்டைவாசல் பகுதியில் கேரள மாநில மதுவிலக்கு காவல்துறை சார்பில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை பொருட்கள், எரிசாராயம் உள்ளிட்டவைகளை கடத்திச் செல்கிறார்களா என அடிக்கடி வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று தென்காசியில் இருந்து புனலூர் நோக்கி சென்ற தமிழக அரசு பஸ்சை மதுவிலக்கு போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஜாபீர் அசன் (50) என்பவர் மறைத்து வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டு 8 கட்டுகளும், ரூ.2 ஆயிரம் நோட்டு கட்டுகள் 3 என மொத்தம் 10 லட்சம் ரூபாயை துணிகளுக்கு மத்தியில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது நண்பர் ஒருவர் சென்னையில் இருந்து கார் வாங்க கொடுத்தனுப்பிய பணம் என கூறியதாக தெரிகிறது. மேலும் நடத்திய விசாரணையில், உரிய ஆவணம் இல்லாததும், இது ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. பின்னர் ஜாபீர் அசனை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்து தென்மலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தமிழக– கேரள பஸ்களில் பயணிகளோடு பயணியாக கஞ்சா, உரிய ஆவணம் இன்றி பணம் கொண்டு செல்பவர்களை போலீசார் கைது செய்யும் போது சட்டவிதிகளின்படி டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை என வெகு நேரமாக கால தாமதம் ஆவதால் பயணிகள் தாங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் பரிதவிப்பது வாடிக்கையாக இருப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே புளியரையில் 2 பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை சீரமைக்க முடியாமல் திணறி வருவதை சாதகமாக பயன்படுத்தி தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்டவைகளை கடத்திச் சென்று ஆரியங்காவில் பிடிபடுவது வழக்கமாக உள்ளது. எனவே தமிழக போலீஸ் வாகன சோதனை சாவடியில் கூடுதல் போலீசார் நியமித்து முழுமையான சோதனைகளை நடத்திட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும். 

Next Story