‘பதவியை ஏற்க மறுத்ததற்கு நிர்பந்தம் எதுவும் இல்லை’ பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு பேட்டி


‘பதவியை ஏற்க மறுத்ததற்கு நிர்பந்தம் எதுவும் இல்லை’ பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு பேட்டி
x
தினத்தந்தி 7 Aug 2017 3:45 AM IST (Updated: 7 Aug 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

உடல் நலன் கருதியே கட்சி பதவி வேண்டாம் என்று முடிவு எடுத்ததாகவும், பதவியை ஏற்க மறுத்ததற்கு நிர்பந்தம் எதுவும் இல்லை என்றும் பெரியகுளம் எம்.எல்.ஏ. டாக்டர் கதிர்காமு தெரிவித்தார்.

தேனி,

அ.தி.மு.க.வில் (அம்மா அணி) புதிதாக 60 பேருக்கு பதவிகளை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்ட பதவிகளை 4 எம்.எல்.ஏ.க்கள் ஏற்க மறுத்தனர். அதில் தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கதிர்காமுவும் தனக்கு கட்சி பதவி வேண்டாம் என்று நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தேனியில் உள்ள டாக்டர் கதிர்காமு எம்.எல்.ஏ. வீட்டுக்கு நேற்று மாலையில் அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் நல்லவேலுச்சாமி தலைமையில், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் மற்றும் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் சுமார் 200 பேர் வந்தனர். கதிர்காமுவை சந்தித்து அவர்கள் பேசினர். அப்போது, மருத்துவ அணியின் மாநில இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் தெரிவித்ததுடன், இந்த பதவியை வேண்டாம் என்று சொல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு கதிர்காமு எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளைகளில் நானும் ஒருவன். எனக்கு இந்த அளவு அரசியலில் பெயர் கிடைத்து இருக்கிறது என்றால், அது எனக்காக பரிந்துரை செய்த மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வனால் தான்.

அவரே எனது அரசியல் ஆசான். தற்போது அவரின் பரிந்துரையின் பேரில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எனக்கு மருத்துவ அணியின் மாநில இணைச்செயலாளர் பதவி அளித்து உள்ளார். நான் சிறப்பாக செயல்படுவேன் என்று என் மீது நம்பிக்கை வைத்து இந்த பதவியை அறிவித்து உள்ளார்.

ஆனால், எனது உடல்நலன் கருதி இந்த பதவி வேண்டாம் என்றேன். எந்த பொறுப்பில் இருந்தாலும் அதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. மாநில அளவில் பொறுப்பு கொடுப்பதால் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது. உடல்நிலை காரணமாக எனது சொந்த விருப்பத்தின் பேரிலும், சிறப்பாக செயல்பட முடியாமல் போய்விடக்கூடாது என்பதாலும் பதவி வேண்டாம் என்று முடிவு செய்தேன். பதவியை ஏற்க மறுத்ததற்கு நிர்பந்தம் எதுவும் இல்லை.

இதுதொடர்பாக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து, உடல் நலன் குறித்து விளக்கம் அளிப்பேன். அப்போது நான் பதவியில் தொடர வேண்டும் என்று அவர் உத்தரவிட்டால், ஏற்றுக் கொள்வேன். எதற்காகவும் கட்சியை விட்டு செல்லமாட்டேன். அ.தி.மு.க. ஓரணியாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story