காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மகளை மைசூருவில் தேடி அலையும் தமிழகத்தை சேர்ந்த பெண்
காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மகளை மைசூருவில் அவருடைய தாய் தேடி அலைகிறார். அவர் தனது மகளை கண்டுப்பிடித்து தரும்படி போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மைசூரு,
காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மகளை மைசூருவில் அவருடைய தாய் தேடி அலைகிறார். அவர் தனது மகளை கண்டுப்பிடித்து தரும்படி போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
காதல்தமிழ்நாடு தஞ்சை அருகே அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழ் செல்வி (வயது 55). இவருடைய மகள் சுபா (25). இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் அய்யம்பேட்டை பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது சுபாவுக்கும், அந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். மேலும் அவரை திருமணம் செய்துகொள்ள சுபா முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் இந்த காதல் விவகாரம் தமிழ் செல்விக்கு தெரியவந்தது. இதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் சுபா, தனது காதலனை ரகசியமாக சந்தித்து தனது காதலை வளர்த்து வந்தார்.
மைசூருவில் தேடி அலையும் தாய்மேலும் தனது காதலனை வீட்டில் ஏற்க மாட்டார்கள் என்று எண்ணிய சுபா, காதலனுடன் வீட்டை விட்டு ஓட முடிவு செய்தார். அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுபா தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். பின்னர் அவர்கள் மைசூருவில் வைத்து திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஓடினாலும், அதன்பின்னர் சுபா தனது தாயை தேடி சொந்த ஊருக்கு வரவில்லை.
நீண்ட நாள் ஆகியும், மகள் தன்னை தேடி வராததால் மனமுடைந்த தமிழ் செல்வி, அவரை பார்க்க மைசூருவுக்கு செல்ல முடிவெடுத்தார். அதன்படி கடந்த 4–ந்தேதி தமிழ்செல்வி தனது மகளை தேடி மைசூருவுக்கு வந்தார். தமிழ் செல்வி மைசூருவில் பல இடங்களில் சுபாவை தேடி அலைந்தார். ஆனால் அவரால் சுபாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
போலீசாரிடம் கோரிக்கைமைசூருவுக்கு வந்த தமிழ் செல்வி, இரவு நேரங்களில் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் தங்கி வந்தார். இந்த நிலையில், மைசூருவில் தமிழ் செல்வி சுற்றி திரிந்ததால் சந்தேகம் அடைந்த உதயகிரி போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், காதலனுடன் ஓடிய தனது மகளை தேடி மைசூருவுக்கு வந்ததாகவும், அவரை பல இடங்களில் தேடி சுற்றி திரிந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘எனக்கு வயதாகிவிட்டதால் எனது மகளை ஒருமுறையாவது ஆசை தீர பார்க்க வேண்டும். அவளிடம் பேச வேண்டும். நான் பல இடங்களில் தேடி பார்த்தும் எனது மகள் கிடைக்கவில்லை. இதனால் நீங்கள் (போலீசார்) தான் எனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
போலீசாரும் தேடுதல்இதையடுத்து போலீசார், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு சுபா பற்றிய தகவலையும், தமிழ் செல்வி பற்றிய தகவலையும் அனுப்பி உள்ளனர். மேலும், போலீசார் மைசூரு நகரம் முழுவதும் சுபாவின் படத்துடன் சுவரொட்டி ஒட்டியிருந்தனர். அதில் சுபாவை பார்ப்பவர்கள் உடனடியாக உதயகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படியும், மகளை தேடிக் கொண்டிருக்கும் தமிழ் செல்விக்கு உதவும்படியும் கூறியிருந்தனர். போலீசாரும் சுபாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.