கோட்டப்பாடியில் பழுதடைந்த குடியிருப்புகளில் வசிக்கும் ஆதிவாசி மக்கள்
கோட்டப்பாடியில் பழுதடைந்த குடியிருப்புகளில் ஆதிவாசி மக்கள் வகிக்கிறார்கள். புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா அய்யங்கொல்லி அருகே கோட்டப்பாடி ஆதிவாசி காலனியில் 10–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் சாலை, நடைபாதை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
கோட்டப்பாடி பயணியர் நிழற்குடையில் இருந்து சுமார் 1½ கி.மீட்டர் தூரத்தில் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் சிமெண்டு நடைபாதை உடைந்து காணப்படுகிறது.
இதேபோல் அனைத்து வீடுகளும் பழுதடைந்துள்ளன. சில வீடுகளின் மேற்கூரைகள் விரிசல் ஏற்பட்டு மழைநீர் உள்ளே வழிந்தோடுகிறது. இதனால் பிளாஸ்டிக் விரிப்புகள் கொண்டு ஆதிவாசி மக்கள் தங்களது வீடுகளை மூடி வைத்துள்ளனர். சில வீடுகளின் சுவர்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இதனால் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தற்போது மழைக்காலமாக உள்ளதால் அனைத்து வீடுகளுக்குள் தண்ணீர் வருகிறது. இதனால் குழந்தைகளை வைத்து கொண்டு அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. ஈரத்தில் படுக்க முடியாததால் இரவில் உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி அடிப்படை வசதிகள், புதிய தொகுப்பு வீடுகள் கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இனி மேலாவது அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.