பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை திரும்ப பெறும் வரை பா.ம.க. போராட்டம் நடத்தும்


பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை திரும்ப பெறும் வரை பா.ம.க. போராட்டம் நடத்தும்
x
தினத்தந்தி 7 Aug 2017 4:30 AM IST (Updated: 7 Aug 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெறும் வரை பா.ம.க. போராட்டம் நடத்தும் என்று சிதம்பரம் அருகே நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

பரங்கிப்பேட்டை,

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களை கையகப்படுத்தி 57 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்த்து, கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க சார்பில் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியப்பட்டு கிராமத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, பசுமை தாயக மாநில நிர்வாகி அருள், தேர்தல் பணிக்குழுத் தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில துணைப் பொதுச்செயலாளர் அசோக்குமார், மாநில சொத்து பாதுகாப்புக்குழுத் தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில துணைத் தலைவர் சந்திரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஆதிநாராயணன் வரவேற்றார். பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைந்தால், ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

கடலூர், நாகை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு சார்பில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைய உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த திட்டத்தை நாங்கள் கொண்டுவர விடமாட்டோம்.

இந்த திட்டத்துக்காக கடலூர், நாகை மாவட்டங்களில் 45 வருவாய் கிராமங்களை தேர்வு செய்து, 57 ஆயிரம் ஏக்கர் நிலம் கையப்படுத்தி, 2 லட்சம் மக்களை அப்புறப்படுத்த உள்ளார்கள். இந்த திட்டம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இந்த திட்டம் ஒரு ஏமாற்றுவேலை. மோசடி திட்டமாகும்.

இந்த திட்டத்தை 2001–ல் தொடங்கியவர் அப்போது முதல்–அசைச்சராக இருந்த கருணாநிதி தான். கடலூர் மாவட்டத்தில் நாகார்ஜூனா என்னும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. தற்போது, மத்திய மாநில அரசுகள் கொண்டுவரும், பெட்ரோலிய ரசாயன மண்டலத் திட்டம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நாகார்ஜூனா என்னும் கம்பெனிக்காக கொண்டுவந்த திட்டமாகும். இந்த திட்டம் வருவதற்கு தி.மு.க. தான் காரணம்.

இந்த திட்டத்தை ரத்துசெய்யும் வரையில் நான் தொடர்ந்து போராடுவேன். இந்த திட்டத்திற்காக இப்பகுதிகளில் இருந்து ஒரு பிடி மண்ணைக்கூட தொடவிடமாட்டேன். தற்போது ஆளும் அ.தி.மு.க.வும், முன்னர் ஆண்ட தி.மு.க.வும் கொள்ளையடிக்கவே இந்த திட்டத்திற்கு துணை போகிறார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்தப்போவது, கடலூர் மாவட்டத்தில் உள்ள நாகார்ஜூனா எண்ணெய் நிறுவனம் தான். இந்த நிறுவனத்தினால் கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 20 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.

ஏற்கனவே கடலூர் சிப்காட் நிறுவனத்தில், கடலூர் சுற்றுப்புற மக்கள் பெரும் பாதிப்பை அடைந்து வருகிறார்கள். தற்போது 57 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தினால் மக்கள் இன்னும் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.

கடலூரில் உள்ள சிப்காட் நிறுவனத்தில் அப்பகுதி இளைஞர்களுக்கு வேலை இல்லை. ஆனால் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது.

கதிராமங்கலத்தில் நடந்த பொதுமக்களின் போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி வருகிறார். இத்தகைய சம்பவம் குழந்தையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போல் உள்ளது. மக்களுக்கு எதிரான பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெறவேண்டும். இந்த திட்டத்தை எதிர்த்து பா.ம.க. போராட்டம் நடத்தும். இந்த போராட்டத்தை காவல் துறையோ, ராணுவமோ வந்தாலும் கட்டுப்படுத்த முடியாது.

கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டாவிட்டால் பா.ம.க. சார்பில் இளைஞர்களை திரட்டி, செங்கல், சிமெண்ட் கொண்டு, சென்று நாங்களே தடுப்பணை கட்டிக்கொள்வோம்.

வருகிற 15–ந்தேதி நடைபெறும் கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டம் தேவையில்லை என்று ஒருமனதாக முதல் தீர்மானம் நிறைவேற்றவேண்டும். அதற்கு பொதுமக்கள் கலந்துகொண்டு, ஒருமனதாக குரல் கொடுக்கவேண்டும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் தேவதாஸ் படையாண்டவர், மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

முடிவில் தொழிற்சங்க தலைவர் பெரியப்பட்டு ஜெயசங்கர் நன்றி கூறினார்.


Next Story