விழுப்புரத்தில் புதிதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி திறந்து வைத்தார்
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராமமோகனராவ் திறந்து வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி சரோஜினிதேவி தலைமை தாங்கினார். கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராமமோகனராவ் கலந்து கொண்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–,
நீதித்துறை கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து அதனை நிறைவேற்றி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. தற்போது சங்கராபுரம், வானூர் ஆகிய பகுதிகளில் நீதிமன்ற கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது நீதித்துறைக்கு தேவையான கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்தார்.
கடந்த 5 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நீதித்துறைக்கு மட்டும் ரூ.636 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு பங்கு ரூ.156 கோடி மட்டுமே. மீதித்தொகை முழுவதும் மாநில அரசின் நிதியாகும். பல்வேறு துறைகளுக்கு நிதிஒதுக்குவதில் நெருக்கடி இருந்தாலும் நீதித்துறைக்கு மட்டும் உடனடியாக நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் 196 நீதிமன்றங்கள் கட்ட நிதிஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். பார் அசோசியேஷன் சங்க உறுப்பினர் கதிரவன், வக்கீல் சங்க தலைவர் ராஜாராம், செயலாளர் வேலவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை குற்றவியல் நீதிபதி அருணாசலம் நன்றி கூறினார்.