தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குரூப்-2 தேர்வை 32,954 பேர் எழுதினார்கள்


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குரூப்-2 தேர்வை 32,954 பேர் எழுதினார்கள்
x
தினத்தந்தி 7 Aug 2017 4:15 AM IST (Updated: 7 Aug 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குரூப்-2 தேர்வை 32 ஆயிரத்து 954 பேர் எழுதினார்கள்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2-ஏ பதவிகளுக்கானதேர்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இந்த தேர்விற்கு 15,584 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக கிருஷ்ணகிரியில் 35 மையங்களும், ஓசூரில் 16 மையங்களும், தேன்கனிக்கோட்டையில் 2 மையங்களும் என மொத்தம் 53 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

இதில் விண்ணப்பித்தவர்களில் 11 ஆயிரத்து 221 பேர் தேர்வு எழுதினார்கள். 4 ஆயிரத்து 363 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் தேர்வு மையங்களுக்கு தேர்வாளர்கள் சென்று வர சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை கலெக்டர் கதிரவன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

குரூப்-2 தேர்வை முன்னிட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் குரூப்-2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தர்மபுரி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 27,636 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் தர்மபுரி பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் 15,521 பேரும், அரூர் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் 6212 பேரும் என மொத்தம் 21,733 பேர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை எழுதினார்கள். தர்மபுரி மாவட்டத்தில் 5,903 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோன்று தர்மபுரி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் உதவி கலெக்டர் ராமமூர்த்தியும், அரூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் உதவி கலெக்டர் கவிதா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த தேர்வு நடந்த மையங்களுக்கு மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. 

Related Tags :
Next Story