உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை ஜெ.குரு குற்றச்சாட்டு


உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை ஜெ.குரு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Aug 2017 4:30 AM IST (Updated: 7 Aug 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்று ஜெ.குரு குற்றம் சாட்டினார்.

கிருஷ்ணகிரி,

விழுப்புரத்தில் செப்டம்பர் 17-ந்தேதி நடைபெறும் சமூக நீதி மாநாடு குறித்த விளக்க பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரியை அடுத்த வேட்டியம்பட்டியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சுப.குமார் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கனேசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெ.குரு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆடு, மாடுகளை வதை செய்ய தடை சட்டம் உள்ளது. ஆனால் இட ஒதுக்கீடு கேட்டு போராடிய 21 இளைஞர்கள் சுட்டு கொல்லப்பட்டதை கேட்க நாதி இல்லை. 108 சாதிகளுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று கொடுத்தது பா.ம.க. தான் என்பது வரலாறு. அதற்கு 27 உயிர்களை பலி கொடுத்து உள்ளோம்.

தி.மு.க. ஆட்சியால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மு.க.ஸ்டாலின் அதிகாரத்தில் இருந்த போது மக்களை சந்திக்கவில்லை. தற்போது சந்திக்கிறார். விவசாயிகள் தங்களின் உரிமைகளுக்காக மாதக்கணக்கில் போராடுகிறார்கள். அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. நீட் தேர்வால் ஏழை மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டாக்டர் ராமதாஸ் போராடி வருகிறார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த காலத்தில் சேலம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தினார். பாலக்காடு ரெயில்வே கோட்டத்தை 2 ஆக பிரித்து சேலம் ரெயில்வே கோட்டத்தை உருவாக்க காரணமாக இருந்தது பா.ம.க. இந்தியா முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ். புகையிலையை முற்றிலுமாக ஒழித்தார். அவரை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து இருந்தால் தமிழகத்தை முன்னுக்கு கொண்டு வந்திருப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் மேகநாதன், மாவட்ட செயலாளர்கள் அர்ச்சுனன் (மத்திய மாவட்டம்), ஆறுமுகம் (கிழக்கு), அருண்ராஜன் (மேற்கு), கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா செட்டியார், இளம்பெண்கள் பேரியக்க மாநில செயலாளர் தமிழ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story