ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்


ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 7 Aug 2017 4:15 AM IST (Updated: 7 Aug 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பது வழக்கம். இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லில் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இவர்களில் திரளானோர் காவிரி ஆற்றங்கரையின் பல்வேறு இடங்களில் குளித்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் எண்ணெய் மசாஜ் செய்யும் இடங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. மசாஜ் செய்து கொண்டவர்கள் மெயின் அருவி, சினிபால்சில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் அந்த அருவிகளில் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது.

மீன்வறுவல்

சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் பரிசல்களில் சென்று காவிரி ஆற்றின் இயற்கை எழிலை கண்டு களிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் பரிசல்துறைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பரிசல் சவாரி விறுவிறுப்பாக நடந்தது. ஒகேனக்கல்லில் உள்ள மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, மீன் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொங்கு பாலம், பார்வை கோபுரம் ஆகியவற்றில் நின்றவாறு சுற்றுலா பயணிகள் ஐந்தருவிகள், காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டதால் நேற்று மீன் விற்பனை சூடுபிடித்தது. ஆர்டரின் பேரில் சமையல்காரர்கள் சுற்றுலா பயணிகளுக்கு மீன்குழம்பு, மீன்வறுவல், சாதம், ரசம் ஆகியவற்றை தயாரித்து வழங்கினார்கள். ஒகேனக்கல்லில் உள்ள ஓட்டல்களில் மீன்வறுவல், மீன் குழம்புடன் கூடிய உணவு விற்பனை அதிகரித்தது. சாலையோர மீன்கடைகளிலும் மீன்வறுவல் விற்பனை அதிகரித்தது. 

Related Tags :
Next Story