மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கடந்த ஜனவரி மாதம் முதல் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. அவ்வப்போது குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் கடந்த மாதம் 31–ந் தேதி இரவு முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புஇந்த நிலையில், குடிநீருக்கான தேவை மேலும் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு நேற்று அதிகாலை முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 51 கனஅடி வீதம் தண்ணீர் வரும் நிலையில், தண்ணீர் திறப்பு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 39.56 அடியாக இருந்தது.