செம்மஞ்சேரியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
செம்மஞ்சேரியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்,
சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமிநகர் பகுதியை சேர்ந்தவர் கீரமணி (வயது 30). கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தொழில்போட்டி காரணமாக பகை இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று மதியம் சுனாமிநகர் 5–வது நிழற்சாலையில் கீரமணி தன்னுடைய மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கீரமணியை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
இதில் கீரமணியின் கை மற்றும் கால் பகுதியில் வெட்டு விழுந்தது. கீரமணியின் அலறல் சத்தத்தைகேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் கீரமணியை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். கஞ்சா விற்பனை போட்டியால் இந்த சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் பல மாதங்களாக கஞ்சா விற்பனை நடப்பதாகவும், பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் செம்மஞ்சேரி பகுதியில் வந்து தங்கியிருப்பதால் கஞ்சா விற்பதில் தொழில்போட்டி, எல்லை பிரச்சினை என இந்த பகுதியில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் இந்த பகுதி மக்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த பகுதியில் நடந்து வரும் கஞ்சா விற்பனையை ஒட்டுமொத்தமாக ஒழித்தால் மட்டுமே இதே போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கமுடியும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.