மின் அழுத்தம் காரணமாக துணைமின் நிலையத்தில் தீ விபத்து


மின் அழுத்தம் காரணமாக துணைமின் நிலையத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 7 Aug 2017 4:00 AM IST (Updated: 7 Aug 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

உயர் மின் அழுத்தம் காரணமாக சிந்தாதிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மின்சார வயர்கள் எரிந்து நாசமாகின.

சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்நாடு மின்சார வாரிய துணைமின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து அந்த பகுதிகளுக்கான மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை சிந்தாதிரிப்பேட்டையின் ஒரு பகுதியில் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே மின் ஊழியர் ஒருவர் அதிக மின் அழுத்தம் உள்ள மின் இணைப்பை, மற்றொரு மின் இணைப்புக்கு மாற்ற முயன்றார். அப்போது மின் பெட்டியில் தீ பிடித்தது.

இதை பார்த்த மின் ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்கு முன் தீ மின்சார வயர்களில் பற்றி எரிய ஆரம்பித்தது.

பின்னர் தகவலின் பேரில் எழும்பூர் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயகுமார் தலைமையில் 6-க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்து மின் பெட்டியில் பற்றி எரிந்த தீயை சுமார் 30 நிமிடங்கள் போராடி அணைத்தனர். ஆனால் மின்சார வயர்கள் அதிகளவில் எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் சிறிது நேரம் புகை மண்டலமாக காணப்பட்டது.

இதனால் துணைமின் நிலையத்திற்கு அருகில் வசித்து வரும் பொதுமக்களும், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மின் இணைப்பை மாற்ற முயன்ற போது மின் அழுத்தம் ஏற்பட்டதால் மின் பெட்டியில் தீப்பற்றியது தெரிய வந்தது. இந்த தீ விபத்தால் சிந்தாதிரிப்பேட்டை பகுதி முழுவதும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.

Next Story